தங்கள் ஓட்டை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? : நீதிமன்றம் கேள்வி

தங்கள் ஓட்டை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்? : நீதிமன்றம் கேள்வி

கோப்புப் படம்

மக்களைச் சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது என்றும், தங்கள் வாக்கை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

  • Share this:
    மக்களைச் சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது என்றும், தங்கள் ஓட்டை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும் எனவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

    வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியை தனி தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாக அறிவிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர், “பிரியாணி, மதுபாட்டிலுக்காகவும் மக்கள் தங்கள் வாக்குகளை விற்பனை செய்கிறார்கள். தங்கள் வாக்குகளை விற்பனை செய்யும் மக்கள் நல்ல தலைவர்களை எப்படி எதிர்பார்க்க முடியும்'' என்று கேள்வி எழுப்பினர்.

    “இலவச திட்டங்களை நிறைவேற்ற கடன் பெறுவதால் நிதிச்சுமை அதிகரிக்கிறது. இந்த நிதிச்சுமையை சமாளிக்க மதுக்கடைகள் அதிகரிக்கப்படுவதாக காரணம் காட்டப்படுகிறது. இதனை மக்கள் உணரவேண்டும். நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களைச் சோம்பேறியாக்குகின்றனர்.

    மக்களைச் சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது? தேர்தலில் வெற்றிபெறும் கட்சிகள் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறார்களா? கடந்த 4 சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களின்போது அரசியல் கட்சியினர் வழங்கிய வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன?

    ஒவ்வொரு தொகுதியிலும் பட்டியல் வகுப்பு மற்றும் பழங்குடியின மக்கள் தொகையைக் கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் தனி தொகுதியைச் சுழற்சி முறையில் ஏன் மறு சீரமைப்பு செய்யக்கூடாது?” என்றும் நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

    அத்துடன் இது தொடர்பான 20 கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்ட வருகின்றனர்.

    Must Read : சென்னையில் ஒரே நாளில் ரூ 3.18 கோடி பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி

     

    இதுவரையில், ஏராளமான பணம் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடா தொடர்பாகவும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Suresh V
    First published: