நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது? நீதிமன்றம் கேள்வி!

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது? நீதிமன்றம் கேள்வி!

சென்னை உயர்நீதிமன்றம்.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடி'யுடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏன் மாற்றக் கூடாது என்பது தொடர்பாக பதிலளிக்குமாறு சிபிஐக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

  அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், சிபிசிஐடி மேற்கொண்டுவரும் விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.

  மேலும் இந்த முறைகேடு தொடர்பாக நான்கு மாணவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 19 பேர் மீது சந்தேகம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

  இந்த மாணவர்களின் கைரேகையை அனுப்பி வைக்க தேசிய தேர்வு முகமையைக் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மாணவர்களின் ஆடை, தலைமுடி, கழுத்து வரை சோதனை செய்த அதிகாரிகள், முகத்தை சோதனை செய்யாமல் விட்டுவிட்டார்கள் என தெரிவித்தனர்.

  இதையடுத்து, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்த 4,250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடி'யுடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  இந்த மாணவர்களின் சேர்க்கையை மறு ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கும் மாணவர்களின் புகைப்படங்களை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வெளியிட கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் சேர்க்கை பெற்ற மாணவர்கள், வேறு மாநிலங்களில் நீட் தேர்வு எழுதியுள்ளதால், இந்த வழக்கை சிபிஐ ஏன் விசாரிக்க கூடாது என்பது குறித்து பதிலளிக்க சிபிஐ க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

  பின்னர், வழக்கு விசாரணையை அக்டோபர் 24ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், நீட் ஆள்மாறாட்ட வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிசிஐடி-க்கு உத்தரவிட்டனர்.

  எஸ் சி, எஸ் டி மாணவர்களுக்கான இடங்களில் ஆள் மாறாட்டம் செய்து மாணவர் சேர்க்கை பெற்றிருந்தால் வன் கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் நியாயமான முறையில் நீட் தேர்வு நடத்த எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மத்திய மாநில அரசுகள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: