நீராரும் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய பாடலின் இரண்டாவது பத்தியில், கன்னடம், தெலுங்கு, மலையாளம், துலு, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை குறிப்பிடும் வரிகளை நீக்கி, கடந்த 1970ஆம் ஆண்டு முதல்வராக இருந்த மு.கருணாநிதி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார். அதன்படி, அப்போது முதல் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு வருகிறது.
மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய முழுமையான பாடல் திருத்தப்பட்டதை எதிர்த்து ஜெபமணி ஜனதா கட்சியின் பொது செயலாளரான ஜெ.மோகன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் 2007ல் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவில், சமஸ்கிருதம் போல் அல்லாமல் இளமையாக தமிழ் மொழி இருப்பதை குறிப்பிடும் வகையிலும், பிற திராவிட மொழிகளை ஒப்பிட்டும் கூறப்பட்ட வரிகளை நீக்கியது மனோன்மனியம் சுந்தரனாரருக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் செயல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே திருத்தப்பட்ட பாடலை தமிழ் பாடப்புத்தங்களில் இடம்பெற செய்துள்ளதையும், விழாக்களில் பாடுவதையும் சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார்.
Also Read : முதல்வர் மு.க. ஸ்டாலின் மீதான18 கிரிமினல் அவதூறு வழக்குகள் ரத்து
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு பிளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி தமிழ்த்தாய் வாழ்த்தை மாற்றி அமைக்க அரசுக்கு உரிமை உள்ளதாகவும், பாடலுக்கான காப்புரிமையை மனுதாரர் பெற்றிருக்கவில்லை என்றும் தெரிவித்ததுடன், வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து 1970ல் திருத்தம் செய்யப்பட்டு தொடர்ந்து பாடப்பட்டு வந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது என கூறிய நீதிபதிகள், ஜெபமணி மோகன்ராஜின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.