அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 16 பேர் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, லிப் ஆப்ரேட்டர் உள்பட 17 பேர் தொடர்ந்து 6 மாத காலத்துக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த 17 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திலுள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்த 17 பேரும், தங்கள் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
பொதுவாக, கைது செய்யப்பட்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டம் குறித்து முடிவு எடுப்பதற்கு ஆலோசனைக் குழுவுக்கு(advisory board) அனுப்பப்படும்.
குண்டர் தடுப்புச் சட்டம் தொடரலா அல்லது ரத்து செய்யவேண்டுமா? என்று ஆலோசனைக் குழு ஒரு குறிப்பிட்டக் காலத்துக்குள் முடிவு எடுக்கவேண்டும். குறிப்பிட்டக் காலத்துக்குள் முடிவு எடுக்கவில்லையென்றால், தண்டனைக்குட்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவார்கள்.
அந்த அடிப்படையில், 17 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதில், ஒருவர் மனுவைத் திரும்பப் பெற்றார்.
இன்று நீதிபதிகள் பி.டி.செல்வம், ராமதிலகம் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆலோசனைக் குழு முடிவு எடுக்கத் தவறியதைக் காரணமாகக் குறிப்பிட்டு 16 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.