ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆர்டர்லிகளும்... காவல்துறையும்... ஒரு பார்வை

ஆர்டர்லிகளும்... காவல்துறையும்... ஒரு பார்வை

orderly system: ஆர்டர்லி விவகாரம் குறித்து காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “காவல்துறையினர் எதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்? வீட்டு வேலை செய்வதற்கா? என தெரிவித்தார்.

orderly system: ஆர்டர்லி விவகாரம் குறித்து காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “காவல்துறையினர் எதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்? வீட்டு வேலை செய்வதற்கா? என தெரிவித்தார்.

orderly system: ஆர்டர்லி விவகாரம் குறித்து காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “காவல்துறையினர் எதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்? வீட்டு வேலை செய்வதற்கா? என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நேற்று அறிவுறுத்தி இருந்தது. வீட்டு உதவியாளரை நியமிப்பதற்காக மாதாந்த அலவன்ஸ் பெறும் போதிலும், உயர் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துகின்றனர் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆர்டர்லி முறை என்பது இன்று, நேற்று இருப்பதல்ல. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களால் காவல்துறையில் ஆர்டர்லி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சீருடைகளை பராமரிப்பது, தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது, உயரதிகாரிகளின் பாதுகாப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றில் ஆர்டர்லிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

மேலும், ஒரு போலீஸ் அதிகாரி 24*7 பணியில் இருக்கும் பட்சத்தில், குறுகிய அறிவிப்பில் குற்றம் மற்றும் கலவரங்கள் நடக்கும் இடங்களுக்கு விரைந்து செல்ல வேண்டியிருக்கும். அதில், ஆர்டர்லி பயிற்சி பெற்ற சீருடை அணிந்தவர் மூத்த அதிகாரிக்கு துணையாகவும் உதவியாகவும் இருக்க வேண்டியிருந்தது. ஆனால், அதுவே காலப்போக்கில் சமைப்பதற்கும், துவைப்பதற்கும், அதிகாரிகளின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்கும், அதிகாரியின் குடும்பத்திற்கு ஷாப்பிங் செய்வதற்கும், ஆர்டர்லிகள் தவறாகப் பயன்படுத்தப்பட தொடங்கினர். இதனால் ஆர்டர்லி போலீஸ் கீழ்த்தரமாக நடத்தப்படும் ஒருவராக மாறினார். பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆயுதம் ஏந்திய போலீஸ் கான்ஸ்டபிளுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி ஏழாம் வகுப்பு மட்டுமே ஆகும். இப்போதெல்லாம், ஏறக்குறைய ஒவ்வொரு கான்ஸ்டபிளும் பட்டதாரிகளாக இருப்பதோடு சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்தில் துறையில் சேருகின்றனர்.

தமிழக காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு டிஜிபி முதல் காவலர் வரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், அயல் பணி என்ற அடிப்படையில் காவல்துறை உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக வேலை செய்து வருகின்றனர். அதிகாரிகள் மற்றும் அவரது குடும்பத்தாரின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் சொல்லும் பணிகளை செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். ஆனால், ஆவணத்திலோ தமிழகத்தில், 1979ஆம் ஆண்டே ஆர்டர்லி போலீஸ் முறை ஒழிக்கப்பட்டுவிட்டதாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், ஆர்டர்லி முறை குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டபோது, அப்போது டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன், இதைதான் பதில் மனுவாக தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரம் குறித்து காட்டமாக கேள்வி எழுப்பிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “காவல்துறையினர் எதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்? வீட்டு வேலை செய்வதற்கா? ஒரு வீட்டு உதவியாளரை நியமிப்பதற்காக மாதாந்த அலவன்ஸ் பெறும் போதிலும், உயரதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது நியாயமா? என சுட்டிக்காட்டினார்.

2014ஆம் ஆண்டில் மாணிக்கவேல் என்பவரை காவலர் குடியிருப்பில் இருந்து காலி செய்யுமாறு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் உறுதி செய்த பிறகும், இந்த ஆண்டுதான் இடத்தை காலி செய்திருப்பதாகவும், அதன் காரணமாக அவர் மீது இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக ஆர்டர்லி முறையை நிறுத்துவது குறித்தும் அரசுக்கு மேலே குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பினார். “முறையாக ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றமாகும்” என நீதிபதி குறிப்பிட்டார்.

படித்தொகையை பெற்றுக்கொண்டு, வீட்டு உதவியாளர்களை வேண்டுமானால் நியமித்துக் கொள்ளலாம். ஆர்டர்லிக்களை பயன்படுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆர்டர்லிக்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். அரசியல்வாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படுவது அழிவுக்கு கொண்டு செல்லும் என்றும், அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும் எனவும் தெரிவித்த நீதிபதி வழக்கின் விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Published by:Archana R
First published:

Tags: Police, Tamil Nadu