Home /News /tamil-nadu /

புள்ளிவிபரத்தில் பகீர் கிளப்பும் மாணவிகளின் தொடர் தற்கொலைகள்… மூலக்காரணம் என்ன? தீர்வுக்காக அரசு அமைப்புகள் செய்ய வேண்டியது என்ன?

புள்ளிவிபரத்தில் பகீர் கிளப்பும் மாணவிகளின் தொடர் தற்கொலைகள்… மூலக்காரணம் என்ன? தீர்வுக்காக அரசு அமைப்புகள் செய்ய வேண்டியது என்ன?

பதின்பருவ மாணாக்கர்களின் மன ரீதியான பிரச்சனைகளுக்கும், பள்ளி, டியூசன் போன்ற இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிப்பதற்கு ஏற்ற அமைப்புகளோ இதுவரையில் ஏற்படுத்தப்படாமலேயே உள்ளது.

பதின்பருவ மாணாக்கர்களின் மன ரீதியான பிரச்சனைகளுக்கும், பள்ளி, டியூசன் போன்ற இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிப்பதற்கு ஏற்ற அமைப்புகளோ இதுவரையில் ஏற்படுத்தப்படாமலேயே உள்ளது.

பதின்பருவ மாணாக்கர்களின் மன ரீதியான பிரச்சனைகளுக்கும், பள்ளி, டியூசன் போன்ற இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிப்பதற்கு ஏற்ற அமைப்புகளோ இதுவரையில் ஏற்படுத்தப்படாமலேயே உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பிரபல தனியார் பள்ளியில் பயின்ற மாணவி கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். பள்ளியின் விடுதியில் தங்கிப்படித்த மாணவி இரவில் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்தார் என்று பள்ளியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்த மாணவியின் தாயார், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்துவந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

காவல்துறையினர் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்படுவதாக விமர்சனங்களும் எழுந்தன. இந்தநிலையில், கடந்த 17-ம் தேதி பள்ளிக்கு எதிரான போராட்டத்தின்போது திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் அந்த தனியார் பள்ளியை அடித்து நொறுக்கினர். கோபத்தின் வெளிப்பாடாக பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகளை தீவைத்துக் கொளுத்தினர். பள்ளிக் கட்டிடங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. சுமார் 4 மணி நேரம் இந்த வன்முறை நீடித்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் விவகாரமாக இது அமைந்தது. அதனையடுத்து, கள்ளிக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இத்தனை பெரிய வன்முறைக்கு பிறகே பள்ளியின் தரப்பில் ஆசிரியர்கள் உட்பட 5 கைது செய்யப்பட்டனர். வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தின் அரியலூர் மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் மாநில அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மதமாற்ற நெருக்கடியின் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார். மேலும், பா.ஜ.க தீவிரமாக போராட்டத்தையும் முன்னெடுத்தது. ஆனால், அந்தப் பள்ளி அமைந்திருந்த பகுதியில் உள்ள மக்கள் அப்பள்ளிக்கு ஆதரவாக நின்றனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான பள்ளி கிறிஸ்துவப் பள்ளியாக இருந்தாலும் இந்து மக்களும் பள்ளிக்கு ஆதரவாக இருந்தனர். அந்த விவகாரத்திலும் காவல்துறையினர் சிறப்பாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தன.

இரண்டு தரப்பு பிரச்சனையின் பரிணாமம் வேறு வேறாக இருந்தாலும், பிரச்சனையின் தொடக்கம் ஒரே தன்மையைக் கொண்டுள்ளது. இரண்டிலும் உயிரிழந்தவர்கள் பள்ளி விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவிகள். அரியலூர் விவகாரத்தைப் பொறுத்தவரையில் மாணவி விஷம் அருந்திய நிலையில் உயிருடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அதனால், அவரது இறப்பு முறை குறித்து யாருக்கும் சந்தேகம் இல்லை. பாலியல் துன்புறுத்தல் குறித்த எந்த புகாரும், சந்தேகத்துக்குமான வாய்ப்புகளும் இல்லை. மேலும், பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைத் தவிர மக்களின் ஆதரவு பள்ளிக்கு இருந்தது.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் வேறு கோணத்தில் சென்றது. மாணவி மரணத்துக்கான சரியான காரணம் இன்றுவரையில் தெரியவில்லை. பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்டார் என்ற குற்றச்சாட்டு தற்போது வரையில் பெரும்பான்மை மக்களால் முன்னிருத்தப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களும் பள்ளிக்கு எதிராக உள்ளனர். குற்றச்சாட்டுக்கு உள்ளான அந்த தனியார் பள்ளி பல ஆண்டுகளுக்கு முன்பே பலமுறை குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி மாணவியின் விவகாரம் அடங்குவதற்குள் மற்றொரு பள்ளி மரணம் நிழந்துள்ளது, தமிழகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த மாணவி 12-ம் வகுப்பு படித்து வந்தார். அவரும் பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்தார். திடீரென அவர் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என செய்தி வந்தது. இது தொடர்பாக மப்பேடு போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விவாகரம் வெளி வந்தவுடன், உயிரிழந்த மாணவியின் ஊரிலும், பள்ளி அமைந்திருக்கும் பகுதியிலும் 100-க்கனக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வழக்கு உடனடியாக சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய டி.ஐ.ஜி சத்ய பிரியா, ‘சந்தேக மரணமாகப் பதிவுசெய்து விசாரணை நடத்தப்படும். தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்’ என்றார். இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சேலம் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர், பள்ளிக் கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருடைய தற்கொலை முயற்சிக்கு காதல் விவகாரம் காரணமாக கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு கோவையிலுள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் பயின்ற 12-ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்த கடிதத்தில் ‘யாரையும் சும்மா விடக் கூடாது’ என்று எழுதியிருந்தார். அதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மாணவி பயின்ற பள்ளியில் உள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி, பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக, மாணவி பள்ளி நிர்வாகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மாணவி தற்கொலை செய்துள்ளார். இந்த விவகாரத்தில் அரசியல் இயக்கங்களின் நீண்ட போராட்டத்துக்கு பிறகே கைது நடவடிக்கை நடைபெற்றது. இந்தச் சம்பவத்துக்கு முன்னதாக சென்னையிலுள்ள பி.எஸ்.பி.பி பள்ளி பாலியல் விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது, அதை யாரும் மறந்திருக்க மாட்டோம்.

நாம் இங்கே குறிப்பிட்டிருப்பது தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவங்கள் மட்டுமே. இந்தச் சம்பவங்கள் அல்லாமல் இன்னும் வெளியே புகாராக பதிவாகாமல் ஏராளமான சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. இந்தச் சம்பவங்களின் பரிணாமங்களும் சூழலும் சற்று வெவ்வேறாக இருந்தாலும், அனைத்திலும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் பள்ளி செல்லும் பருவம் எய்திய பெண் குழந்தைகள்.

கல்லூரியில் பயிலும் பெண்களை விட பள்ளி செல்லும் பிள்ளைகள் மனதளவில் வலுவற்றவர்களாகவும், அவர்களுக்கு பிரச்சனையை சமாளிப்பதற்குரிய முதிர்ச்சி இல்லாததும், பிரச்சனை குறித்து யாரிடம் சொல்லி தீர்வு காணலாம் என்பதற்கான வழிமுறைகள் தெரியாததும் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று புரிந்துகொள்ளலாம். பள்ளி மாணவிகளின் தற்கொலைக்கு பாலியல் துன்புறுத்தல்கள் மட்டுமே காரணம் என்றும் சுருக்கவிட முடியாது. பள்ளிப் பருவக் காதல்களை ஆசிரியரோ, குடும்பத்தினரோ கடுமையாக கண்டிப்பதோ அல்லது பள்ளியில் சகமாணவர்கள் முன்னிலையில் ஆசிரியர்களால் கடுமையாக திட்டப்படுவதும் கூட காரணமாக அமைகிறது. இரண்டாவது காரணத்துக்கு மாணவி, மாணவர் வேறுபாடு இல்லை. ஆனால், முதல் காரணத்துக்கு மாணவிகள்தான் பெரும்பாலும் இரையாகின்றனர்.

இத்தனை தொடர் இழப்புகளுக்குப் பிறகும் அரசு அமைப்புகளோ அல்லது பெற்றோர்களோ ஒரு புரிதலுக்கு வரவில்லை என்றுதான் தெரிகிறது. பதின்பருவ மாணாக்கர்களின் மன ரீதியான பிரச்சனைகளுக்கும், பள்ளி, டியூசன் போன்ற இடங்களில் நடைபெறும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து புகார் அளிப்பதற்கு ஏற்ற அமைப்புகளோ இதுவரையில் ஏற்படுத்தப்படாமலேயே உள்ளது. பெற்றோர்கள் தரப்பிலோ குழந்தைகளிடம் அவர்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறியும் பழக்கம் இல்லாமல் உள்ளது.

அதேபோல, கல்வி நிறுவனங்களில் நடைபெறும் தற்கொலை, பாலியல் புகார், அல்லது மர்ம மரணம் குறித்த விவகாரங்களைக் காவல்துறையினர் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லை என்றே கூறலாம். பிரச்சனை பெரிதானால் மட்டுமே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, இதுபோன்ற வழக்குகள் முறையாக கையாளப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஒரு காவல் அதிகாரி நியமனம் தேவைப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பிரச்சனைகளை தனித் தனி நிகழ்வுகளாக அணுகாமல் இந்தப் பிரச்சனையின் வேர்களைக் கண்டறிந்து அதைக் களைவதற்கான வழிமுறையை கண்டாராய்ந்து செயல்படுத்துவதே தீர்வாக அமையும். முதலில், பள்ளி செல்லும் மாணாக்கர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலமோ அல்லது நம்பிக்கையான அறிவுரையாளர் ஒருவரையோ அரசு ஒவ்வொரு பள்ளியிலும் நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தற்கொலைகள் எதற்கும் தீர்வாகாது என்பதை வளரும் பருவத்திலேயே அவர்களின் மனதில் விதைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
Published by:Archana R
First published:

Tags: School students suicide, Tamil Nadu, Tamil Nadu government

அடுத்த செய்தி