ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டெல்லி சென்ற எடப்பாடி; ஓ.பி.எஸ் ஆதரவு சசிகலா அறிக்கை- பா.ஜ.கவின் விருப்பம் என்ன?

டெல்லி சென்ற எடப்பாடி; ஓ.பி.எஸ் ஆதரவு சசிகலா அறிக்கை- பா.ஜ.கவின் விருப்பம் என்ன?

ஓ.பி.எஸ், சசிகலா, இ.பி.எஸ்

ஓ.பி.எஸ், சசிகலா, இ.பி.எஸ்

எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

அ.தி.மு.கவின் ஒற்றைத் தலைமை விவகாரம் இப்போதைக்கு முடிவுக்கு வரும் நிலையில் இல்லை. எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  டெல்லி சென்றிருப்பது அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அ.தி.மு.க தொண்டர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 23-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம், தீர்மானங்கள் ரத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து, மீண்டும் பொதுக்குழு, இடைக்காலப் பொதுச் செயலாளர் என்று அ.தி.மு.க பரபரப்பாகவே இயங்கிவருகிறது.

ஓ.பன்னீர் செல்வத்தின்எதிர்ப்பையும் சட்டரீதியிலான நெருக்கடியையும் மீறி ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.கவின் பொதுக்குழுவை நடத்திக் காட்டினார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதற்கு சட்ட அங்கீகாரம் என்ன என்பது இதுவரையில் தெரியாமலே உள்ளது. இருப்பினும், பொதுக்குழு நடந்த அதே நேரத்தில் தமிழ்நாடு வருவாய் துறையினரால் சீல் வைக்கப்பட்ட அ.தி.மு.க அலுவலகத்தை சட்டரீதியிலான போராட்டத்தின் மூலம் தன்வசப்படுத்தினார் எடப்பாடி பழனிசாமி.

இது  எடப்பாடி பழனிசாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்பட்டது . இடைக்கால பொதுச் செயலாளர் என்ற எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்புக்கு கிடைத்த முதல் சட்ட அங்கீகாரமாக கருதப்பட்டது. ஆனால், அது முழு வெற்றியல்ல என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் தங்களது இருப்பை அரசியல் களத்தில் பதிவு செய்வதற்கு தொடர்ந்து முயன்று வருகின்றனர். ஓ.பன்னீர் செல்வத்தைவிட தி.மு.க எதிர்ப்பில் சமரசம் இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில் இடைக்காலப் பொதுச் செயலாளர் தேர்வுக்கு பிறகு தி.மு.கவை தொடர்ந்து விமர்சித்துவருகிறார் இபிஎஸ். பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் சாதி குறித்த கேள்வி, மின் கட்டணம் உயர்வு, டெல்டா மாவட்டங்களில் நெல் சேதம் விவகாரம் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தி.மு.க அரசுக்கு எதிராக காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்திலும் தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதேநேரத்தில் கள்ளக்குறிச்சி விவகாரம், பெரியார் பல்கலைக்கழக விவகாரம், மின் கட்டண விவகாரங்களில் தி.மு.க அரசை காட்டமாக விமர்சிக்காமல் தனக்கே உரிய பாணியில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார் ஒபிஎஸ். அ.தி.மு.க இடைக்கால பொதுச் செயலாளர் என எடப்பாடி பழனிசாமியும், அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர் செல்வமும் தங்களது கருத்தைப் பதிவு செய்துவருகின்றனர். திரவுபதி முர்முவின் வெற்றிக்கு இருவரும், அ.தி.மு.கவின் சார்பாக வாழ்த்துகிறேன் என தாங்கள்தான் அ.தி.மு.க என முன்னிருத்தினர்.

அ.தி.மு.க விவகாரத்தில் நிர்வாகிகளின் ஒப்புதலையும் மீறி பா.ஜ.கவின் இசைவும் முக்கியம் என்பதை இருவரும் உணர்ந்தேயுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். பா.ஜ.கவைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமியை விட ஓ.பன்னீர் செல்வத்திடம் ஆரம்பம் முதலே நெருக்கம் காட்டிவந்துள்ளது. எனவே, சமீபத்தில் அ.தி.மு.க அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா உரிமையாளர், நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரை வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தொடங்குவது எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மத்திய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். நீதிமன்ற உத்தரவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாகவே வந்தாலும் பா.ஜ.கவின் செயல்பாடுகள் அவருக்கு எதிராக இருப்பதுபோன்ற சூழலே உள்ளது.

இந்தச் சூழலில் நேற்று  இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கடந்த இரு தினங்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி, ‘ஓ.பி.ரவீந்திரநாத் அ.தி.மு.கவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை அ.தி.மு.க உறுப்பினராக கணக்கிடக்கூடாது’என்று கோரியிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் செயலுக்கு சசிகலா கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து சசிகலா வெளியிட்ட அறிக்கையில், ‘அ.தி.மு.க-வின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில்‌ செயல்படுவதைத் தடுக்கும்‌ நடவடிக்கைகளை, கழகத்‌ தொண்டர்கள்‌ யாரும்‌ ஏற்றுக்‌ கொள்ளமாட்டார்கள்‌. கட்சியின் நலனைக்‌ காற்றில்‌ பறக்கவிட்டு, எடுத்த தவறான முடிவுகளால்‌, நாடாளுமன்ற மாநிலங்களவையில்‌ நமது உறுப்பினர்களின்‌ எண்ணிக்கை குறைந்ததோடு, கட்‌சியின்‌ அங்கீகாரத்தையும் இழந்து நின்றோம்‌.

இந்த சூழ்நிலையில்‌, கட்சியின்‌ சார்பில்‌ நாடாளுமன்றத் தேர்தலில்‌ வெற்றிபெற்ற ஒரே ஒரு மக்களவை உறுப்பினரை, கட்சியை விட்டே நீக்குவதும்‌, நாடாளுமன்றத்தில்‌ அ.தி.மு.க-வின் பெயரைச் சொல்வதற்கு யாருமே வேண்டாம்‌ என்று கண்மூடித்தனமாக முடிவு எடுப்பதையும்‌ கழகத்‌ தொண்டர்கள்‌ ஒரு நியாயமற்ற செயலாகத்தான்‌ பார்ப்பார்களே தவிர, ஒரு அறிவார்ந்த செயலாக யாருமே பார்க்கமாட்டார்கள்‌’ என்று ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி சத்தம் இல்லாமல் டெல்லி சென்றுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவடையும் நிலையில் அவருக்காக நடைபெற்ற பிரிவு உபசார விழாவில் பங்கேற்க டெல்லி சென்றார். மேலும், திரவுபதி முர்மு பதவியேற்பு விழாவிலும் அவர் பங்கேற்பார் என்று தெரிகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்து தனக்கான ஆதரவை பெற முயற்சிப்பார் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அ.தி.மு.கவை வென்றெடுக்க மத்திய பா.ஜ.கவின் ஆதரவு தேவை என்பது தெரியாதவரல்ல எடப்பாடி பழனிசாமி. ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா மூவரும் இணைந்த அ.தி.மு.கவையே பா.ஜ.க விரும்புகிறது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்த டெல்லி பயணத்தில் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா இருவரையும் ஓரம் கட்டும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்துவாரா என வரும் காலம் பதிலளிக்கும்.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam, Sasikala