குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி...13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

news18
Updated: August 18, 2019, 9:58 AM IST
குளிர்வித்த மழை... மக்கள் மகிழ்ச்சி...13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
மழை
news18
Updated: August 18, 2019, 9:58 AM IST
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்த நிலையில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையின் பல்வேறு இடங்களில், வெள்ளிக்கிழமை இரவு முதல் மழை பெய்தது. தொடர்ந்து நேற்று நண்பகல் வரை பரவலாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பூவிருந்தவல்லி, சோழவரம், ஊத்துக்கோட்டை, பூண்டி செங்குன்றம், பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது. குடிநீர் ஏரிகளில் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருவள்ளூர் பஜார் பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் தேங்கியதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதலே தொடர்ந்து பரவலாக சாரல் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் தாமதமாக செல்ல நேர்ந்தது. இதேபோன்று சூளகிரி, ஒசூர், தளி, ஊத்தங்கரை உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி, பேரையூர், சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டியது. இந்த மழை மானாவாரி பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

விருதுநகரில் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து சாரல் மழை பெய்ததால் குளிர்ந்த சூழல் நிலவியது.

Loading...

இதனிடையே, வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது.சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Also watch

First published: August 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...