Home /News /tamil-nadu /

கொட்டித் தீர்த்த கனமழை - வெப்பத்தின் பிடியில் இருந்து விடுபட்ட பொதுமக்கள்

கொட்டித் தீர்த்த கனமழை - வெப்பத்தின் பிடியில் இருந்து விடுபட்ட பொதுமக்கள்

Youtube Video

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.

    தமிழகத்தில் கடந்த 4-ம் தேதி தொடங்கிய கத்தரி வெயில் நேற்றுடன் முடிந்தது. இந்த காலகட்டத்தில் வெயில் சுட்டெரித்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மதுரை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 5 மணி நேரத்துக்கும் மேல் பெய்த மழையால் அம்மா திடல் காய்கறி சந்தை மூழ்கியது.

    150-க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்த காய்கறிகள் வீணானதால் தென்மாவட்டங்களுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரப் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் மழை நீர் வெள்ளம் போல ஆர்ப்பரித்து சென்றது.

    சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் மழை கொட்டித் தீர்த்தது. ஆனால், சிவகங்கையில் மழை நீருடன் சாக்கடை நீரும் சாலையில் வெள்ளம் போல் ஓடியது.

    கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேல் மிதமான மழை பெய்தது. இதனால், அருவிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டியதுடன், நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும், நட்சத்திர ஏரிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    இதே போல் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், குமுளி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

    கோவையில் காந்திபுரம், சிங்காநல்லூர், பீளமேடு, கவுண்டம்பாளையம் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், காந்திநகர் பகுதியில் உள்ள 5 வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலைமுதலே வெயில் வாட்டி வந்த நிலையில் அனல் காற்றும் வீசியது. ஆனால், அவிநாசி, ஊத்துக்குளி, பல்லடம் பகுதிகளில் இரவில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்தது.

    ஈரோட்டில் பூந்துறை , வெள்ளோடு, பெருந்துறை உட்பட மாவட்டம் முழுவதும் சுமார் 2 மணி நேரம் இடி, மின்னலுடன் மழை பெய்தது.

    வேலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கடுமையான வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், ஒரு சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டையில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேக்கு மரம் சாய்ந்தது. அப்போது, அதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

    கந்தக பூமியான விருதுநகரில் முத்துராமன்பட்டி, அல்லம்பட்டி, பாத்திமாநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மிதமான மழை பெய்ததில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது. வெப்பத்தின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த மக்கள் மழையினால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழகத்தில் 25 நாட்களாக சுட்டெரித்த கத்தரி வெயில், மதுரை, கோவை, வேலூர் உட்பட தமிழகத்தன் பெரும்பான்மையான பகுதிகளில் மழையுடன் முடிவடைந்துள்ளது.

    Also read... மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே தீ விபத்து - கிழக்கு சித்திரை வீதியில் கடைகள் திறக்க தடை






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி