கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு.... கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கனமழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு.... கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • News18
  • Last Updated: October 19, 2019, 7:33 PM IST
  • Share this:
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் மழையால் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் தேனி கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த தடை 26-வது நாளாக நீடிக்கிறது.

நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதால் திருப்பூர் அணைப்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் நேற்றிரவு நீரில் மூழ்கியது. நீர்வரத்து குறைந்து காலை போக்குவரத்து தொடங்கினாலும், மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் 2-வது முறையாக தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால், வாகன ஓட்டிகள் 14 கிலோமீட்டர் தொலைவு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


கொடைக்கானலில் பெய்த தொடா் மழையால் பேத்துப்பாறை ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. விவசாயிகள் விளைபொருட்களை சந்தைப்படுத்த உயிரை பணயம் வைத்து இந்த ஓடையை கடந்து செல்கின்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே பில்லூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி 7ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்தது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டியில் உள்ள சஞ்சீவிராயன் தடுப்பணை நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இதனால் வளையபாளையம், எரங்காட்டூர், கரும்பாறை உள்பட 5 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Loading...

சிறுவாணி அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகைக்கு காலவரையற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோபி செட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று மாலை வினாடிக்கு 25,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல்லில் பாதுகாப்பு கருதி 71-வது நாளாக அருவியில் குளிக்கவும், 3-வது நாளாக பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Also watch

First published: October 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...