முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நெருங்குகிறது அசானி புயல்... தமிழகத்தில் கொட்டிய மழை - ஆந்திர கடலோரப் பகுதிகளில் அதி கனமழை எச்சரிக்கை!

நெருங்குகிறது அசானி புயல்... தமிழகத்தில் கொட்டிய மழை - ஆந்திர கடலோரப் பகுதிகளில் அதி கனமழை எச்சரிக்கை!

மழை

மழை

Cyclone Asani : அசானி புயலால் ஆந்திர கடலோரப் பகுதியில் அதி கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

வங்கக்கடலில் உருவான அதிதீவிர அசானி புயல், ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிக்கு இன்று காலை வர உள்ளது. ஆந்திர கடலோரப் பகுதியில் அதி கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அந்தமான் அருகே உருவான அசானி புயல், தீவிரமடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. நேற்றிரவு 11.30 மணியளவில் ஆந்திரப்பிரதேசத்தின் மசூலிப்பட்டினத்திலிருந்து 90 கிலோமீட்டர் தெற்கு, தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இது வடமேற்கில் நகர்ந்து ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிக்கு இன்று வந்துசேரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

பின்னர் இது திசைமாறி வடக்கு, வடகிழக்கு திசையில் நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இன்று காலை புயலாகவும், நாளை தீவிர காற்றழுத்தமாகவும் வலு குறையும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர்.

இதன் காரணமாக, ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. கடலோர ஒடிசா மற்றும் அதனையொட்டிய, கடலோர மேற்குவங்கத்தில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அசானி புயல் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஓரிக்கை, செவிலிமேடு, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம், வாலாஜாபாத், ஒரகடம் பகுதிகளில் பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல, கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர், கணபதி, பீளமேடு, கவுண்டம்பாளையம், இராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. மாலை நேரத்தில் பரவலாக பெய்த மழையால் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

Read More : இனப்படுகொலைக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது- இலங்கை விவகாரம் குறித்து விஜயகாந்த் கருத்து

திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக பெய்த கனமழையால், கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நகரப் பகுதிகள் மட்டுமின்றி, செம்பட்டி, சின்னாளப்பட்டி உள்ளிட்ட பிற பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண சூழல் நிலவியது.

இடி, மின்னலுடன் கனமழை

திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக, அவிநாசி, காங்கேயம், தாராபுரம் மற்றும் பல்லடம் சாலைகளில் கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கின. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

மின் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், வங்கக்கடலில் உருவான அசானி புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. குறிப்பாக ஆரணி, போளூர் பகுதிகளை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

Must Read : மலர் கண்காட்சிக்கு தயாராகும் கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா..! பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள்

இதில், போளூர், வசூர், குன்னத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வீசிய சூறைக்காற்றால் மின்சாரக் கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால், பல்வேறு கிராமங்களில் மின்சார விநியோகம் தடைபட்டது. இந்த நிலையில், பலத்த காற்று காரணமாக போளூர் பேருந்து நிலையத்தில் இருந்த செல்போன் டவர் கீழே விழுந்தது. அப்போது அங்கு பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதேபோல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே கன மழை பெய்தது.

First published:

Tags: Cyclone Asani, Rain, Rain Forecast