சென்னையில் மழை... முக்கிய சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமம்

ஆவடி, போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் தண்ணீர் ஆறாக ஓடியது, பல இடங்களில் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

 • Share this:
  தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால், நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

  வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் அதிகாலை முதலே நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்தது. கிண்டி, மீனம்பாக்கம், விமான நிலையம், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை, வடபழனி உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால், அலுவலகத்திற்கு சென்ற வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

  இதேபோல், கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர், ஆவடி, போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் தண்ணீர் ஆறாக ஓடியது, பல இடங்களில் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

  திருவள்ளூர்

   

  திருவள்ளூர் மாவட்டத்தில் கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை சுற்று வட்டாரங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து, நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

  காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால், ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

  கரூர்

   

  கரூர் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால், 57 மதகுகள் மூலம் தென்கரை வாய்க்காலில் 400 கன அடியும், கட்டளை மேட்டு வாய்காலில் 250 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

  தேனி

  தேனி மாவட்டம், சோத்துப்பாறை அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணைக்கு வரும் 90 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால், வராக நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க...ஜோ பைடன், கமலா ஹாரிஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

   

  உபரியாக வெளியேற்றப்படும் நீரை பெரியகுளம், பாப்பிரெட்டிகுளம், தாமரைக்குளம் ஆகிய குளங்களில் தேக்கி வைக்கும் நடவடிக்கையை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

  தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறி உள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: