வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.
இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க...
வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும்?- ரமணன்
இதே போன்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால், பரமக்குடி முழுவதும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதேபோன்று, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கனமழை பெய்ததால். சாலைகளில் மழைநீர் தேங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய முதல் நாளிலேயே தென்மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை சுற்றுவட்டாரங்களில் இன்று (29.10.2020) காலை 6:00 மணி வரை பதிவான மழை விபரங்கள்:
சென்னை மாவட்டம்:
மயிலாப்பூர் : 200மிமீ ( மிக கனமழை)
சென்னை டிஜுபி அலுவலகம் : 178மிமீ (மிககனமழை)
அம்பத்தூர்: 90மிமீ
ஆலந்தூர் : 78.5மிமீ
சோழிங்கநல்லூர் : 77.2மிமீ
அண்ணா பல்கலைக்கழகம் : 75.2மிமீ
தொண்டையார்ப்பேட்டை : 67.0மிமீ
அயனாவரம் : 53.0மிமீ
எம்.ஜி.ஆர் நகர் மாம்பலம் : 47.8மிமீ
திருவள்ளுர் மாவட்டம்:
செங்குன்றம் ( Redhills) : 128மிமீ (மிககனமழை)
சோழவரம்: 55மிமீ
பூண்டி : 49மிமீ
கும்மிடிப்பூண்டி : 46மிமீ
தாமரைப்பாக்கம் : 36மிமீ
பொன்மலை : 27மிமீ
ஊத்துக்கோட்டை : 23மிமீ
திருவாலங்காடு : 12மிமீ
திருவள்ளுர் : 06.00மிமீ