தமிழகத்தில் நேற்று பரவலாக மழை - இன்றும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை

மணப்பாறையில் நீர் நிரம்பிய சுரங்கப்பாதையில் ஆட்டோவுடன் சிக்கிக்கொண்ட ஓட்டுநர் பத்திரமாக மீட்கப்பட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்த நிலையில், இன்றும் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. உத்தமபாளையம், சின்னமனூர், தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

கொடைக்கானலில் பரவலாக பெய்த மழை

கொடைக்கானலில் 6 மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. நட்சத்திர ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால் நிரம்பிவழியும் தருவாயில் உள்ளது. மழை காரணமாகவும், கடும் குளிராலும் சுற்றுலா பயணிகள் பல்வேறு சுற்றுலாத் தலங்களை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

குற்றாலத்தில் நீர்வரத்து அதிகரிப்பு

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் குற்றாலத்தில் மெயின் அருவி, ஐந்தருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. ஐந்தருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அரை மணி நேரம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், தண்ணீர் வரத்து சீரானதும் ஐந்தருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர் பெய்த மழை

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், பிச்சாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, விருத்தாசலம் போன்ற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

புதுச்சேரியில் லேசான கனமழை

புதுச்சேரியில் இரவு 7 மணிக்கு சாரல் மழை பெய்யத் தொடங்கியது. 9 மணிக்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல், சித்தன்னவாசல், குடுமியான்மலை வயலோகம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக பலத்த மழை பெய்தது.

திருச்சியில் கனமழை

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ஒன்றரை மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால் சுரங்கப்பாதை முழுவதும் நீர் நிரம்பியது. இதனையறியாமல் அதில் ஆட்டோவுடன் சிக்கிக் கொண்ட ஓட்டுநரை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.

இன்றும் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் 

திண்டுக்கல், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தேனி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அரபிக்கடல் மற்றும் ஆந்திரா, மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... வீட்டுக்கு ஒரு கிணறு அசத்தும் முன்மாதிரி கிராமம்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.</
Published by:Vaijayanthi S
First published: