• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை

கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கன மழை எச்சரிக்கை

கனமழை

கனமழை

தமிழகத்தின் கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறி ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழகத்தில் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து, சென்னை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக கன மழை பெய்து தீர்த்து வருகிறது. இதேபோல, சென்னையிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நேற்று முன்தினம் இரவு சென்னையில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் பிரதான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வடிய இடமின்றி தேங்கி உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல நேற்று இரவும் விடிய விடிய மழை பெய்தது.

    இந்நிலையில், கடலூர், நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் இன்றும் (நவம்பர் 1), நாளையும் (செவ்வாய்க்கிழமை) மிக கன மழை பெய்யும் என்பதற்கான ‘ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், இலங்கை கடலோர பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதியில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 1ஆம் தேதி (இன்று) முதல் 2ஆம் தேதி (நாளை) வரை டெல்டா மாவட்டங்கள் (தஞ்சை, திருவாரூர், நாகை) புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 8 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ (மிக கன மழை அதாவது 12 செ.மீ. முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யக்கூடும்) விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி, புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். 3ஆம் தேதியும், தீபாவளி நாளாகிய 4ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘ஆரஞ்சு எச்சரிக்கை' விடுக்கப்படுவதால் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று, சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Must Read : 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

    கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 3ஆம் தேதி வரை சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 4ஆம் தேதியன்று, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: