மழையில் நனைந்தபடியே இயற்கை எழிலை கண்டு ரசித்த மக்கள்....12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் 2 நாட்களுக்கு இரவு மற்றும் அதிகாலையில் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

news18
Updated: August 19, 2019, 8:28 AM IST
மழையில் நனைந்தபடியே இயற்கை எழிலை கண்டு ரசித்த மக்கள்....12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
மழை (கோப்புப் படம்)
news18
Updated: August 19, 2019, 8:28 AM IST
தமிழகத்தில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது. வேலூர் உட்பட 12 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், திருப்பரங்குன்றம் சுற்றுவட்டாரத்தில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. அரை மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கிய மழை, பின்னர் சாரல் மழையாக தொடர்ந்தது. ஆடிப்பட்டத்தை முன்னிட்டு மானாவாரியாக சாகுபடி செய்யப்பட்ட பயிர்களுக்கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்ததால் சாலைகளில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. மேற்குதொடர்ச்சி மலை அடிவார பகுதியான அய்யனார் கோவில், சாஸ்தா கோவில் ஆகிய பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.


சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில், கொல்லங்குடி, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 2வது நாளாக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளித்தது.

தேனியில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, கம்பம், கூடலூர் உட்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தது. இதேபோல் மழை நீடித்தால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பக் கூடும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிற்பகலில் மிதமாக தொடங்கிய மழை இரவில் இடி, மின்னலுடன் சாரல் மழையாக பெய்தது இதனால், சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலேயே முடங்கினர். சிலர் மழையையும் பொருட்படுத்தாமல் நனைந்தபடியே இயற்கை எழிலை கண்டு ரசித்தனர்

Loading...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை சனிக்கிழமை பிற்பகல் வரை வெளுத்து வாங்கியது. இதனால், கிருஷ்ணகிரி அருகே அமைந்துள்ள படேதலாவ் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதேபோல், மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஏரிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் குடிநீர் தட்டுப்பாடு தீரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டாரத்தில் 2-வது நாளாக கனமழை பெய்ததால் தேவஸ்தானம் ஊட்டல் காப்பு காட்டில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதனால், மிட்டாளத்தில் யுவராஜ் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் வெள்ள நீர் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன.

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறினார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் 2 நாட்களுக்கு இரவு மற்றும் அதிகாலையில் மழை தொடரும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.

மேலும் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 Also watch

First published: August 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...