• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை... ஆறு மணி நேரத்தில் 24 செ.மீ கொட்டியது

நெல்லை, தூத்துக்குடியில் வரலாறு காணாத மழை... ஆறு மணி நேரத்தில் 24 செ.மீ கொட்டியது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

  • Share this:
    தூத்துக்குடியில் வியாழன்கிழமை காலை 10 மணிக்கு இடி, மின்னலுடன் ஆரம்பித்த மழை, இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. மாநகரில் மட்டும் 6 மணி நேரத்தில் 25 புள்ளி 4 சென்டி மீட்டர் மழை பதிவானது. வரலாறு காணாத இந்த கனமழையால், தூத்துக்குடி மாநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ரயில் நிலையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தூத்துக்குடியிலிருந்து கிளம்பிய வேண்டிய மைசூர், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்ல தாமதமாகின.

    தூத்துக்குடியில் மாலையில் சற்று ஓய்ந்திருந்த மழை, இரவு மீண்டும் தலைக்காட்ட தொடங்கியது. மீண்டும் கொட்டிய கனமழையால், தூத்துக்குடி நீதிமன்றத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதேபோல், திருநெல்வேலியிலும் வியாழன்கிழமை காலை முதல் அடைமழை பெய்தது. மாநகரில் பேட்டை, டவுன், பாளையங்கோட்டை, சமாதானபுரம், கேடிசி நகர், தச்சநல்லூர், மேலப்பாளையம், பெருமாள்புரத்தில் மழை தொடர்ந்தது. இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    திருச்செந்தூரில் வெளுத்து வாங்கிய கனமழையால், சாலையில் தண்ணீர் ஆறு போல பெருக்கெடுத்தது. புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலின் உள்பிரகாரத்தில் மழைநீர் தேங்கியது. வெளிபிரகாரங்களில் முழங்கால் அளவு தேங்கிய மழைநீரால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

    தொடர் மழை காரணமாக, வாலசமுத்திரம் பகுதியில் இரண்டு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த ஓடைகளுக்கு நடுவில் வசித்து வந்த 9 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேர், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், ஓடையின் நடுவே கயிறு கட்டி, 9 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரை பாதுகாப்பாக மீட்டனர்.

    இந்த நிலையில், கோவில்பட்டி அருகே புங்கவர்நத்தம் கிராமத்தில் கண்மாய் நிரம்பி ஊருக்குள் மழைநீர் புகுந்ததால், வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது. அங்குள்ள அயன்ராசாபட்டி கிராமத்தில், ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் சென்றதால், மக்கள் செய்வதறியாது கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: