கேரள கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக
மழை பெய்து வருகிறது. அந்த வகையில்
கோவையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
கொடைக்கானலில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கன மழை பெய்தது. மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் குடிநீர் ஆதாரங்கள் வெகுவாக உயர்ந்து வருவதுடன் குளுமையான சூழலும் நிலவி வருகின்றது. தேனி மாவட்டத்தில் போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்தது.
இதேபோல, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. ரயில்வே சுரங்கபாலத்தில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் சென்றனர்.
இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நாகூர், பனங்குடி, தெத்தி, திட்டச்சேரி, திருக்குவளை, தலைஞாயிறு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கனமழை பெய்தது. கோடை மழை தொடர்ந்து நீடித்தால் சிறுதானிய பயிர்கள், பருத்தி, எள் உள்ளிட்ட பயிர்கள் பாதிக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழப்பு
விருதுநகர் கருப்பசாமி நகரில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தபோது சதீஷ் என்பவரின் வீட்டில் கட்டுமானப் பணியை மேற்கொண்டிருந்த ரோசல்பட்டியை சேர்ந்த கார்த்திக்ராஜா, முருகன், ஜக்கம்மா மற்றும் ஜெயசூர்யா ஆகிய நால்வர் மின்னல் தாக்கி உடல் கருகி பலியாகினர். அதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் நேரில் வந்து பார்வையிட்டார்.
Must Read : நல்லப் பெயரை வாங்கும் வகையில் செயல்படவேண்டும் - மேயர், துணை மேயர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இதேபோல, கள்ளக்குறிச்சியை அடுத்த நிறைமதி கிராம ஏரியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஜெயக்கொடி மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெயக்கொடியின் நான்கு ஆடுகளும் மின்னல் தாக்கி உயிரிழந்தன. இதேபோன்று திருவதிகை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வேலை பார்த்து வந்த அபர்நாத் என்ற 23 வயது இளைஞர் பலத்த காயமுற்றார்.
Read More : குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் - குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
ராணிப்பேட்டை மாவட்டம் கரிவேடு பகுதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக மரத்தின் நிழலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது மின்னல் தாக்கியதில், குணசேகரன் என்பவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு இளைஞர் தீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் இரங்கல்
இந்நிலையில், விருதுநகர் மற்றும் கள்ளக்குறிச்சியில் மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்ததற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இன்றும் கனமழை பெய்யும்
இந்நிலையில், தமிழகம், புதுவை, காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.