கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சி... இன்னும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கொட்டித்தீர்த்த மழையால் மக்கள் மகிழ்ச்சி... இன்னும் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
கோப்புப்படம்
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2019, 7:32 AM IST
  • Share this:
தமிழகத்தில் சென்னை, தருமபுரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

வளிமண்டல மேலடக்கு சுழற்சியால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இரண்டாவது நாளாக நேற்று இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், பழைய மகாபலிபுரம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

திருவள்ளூரை அடுத்த மாந்திப்பை கிராமத்தில் வயலில் நடவுப் பணியின் போது மின்னல் தாக்கியதில் பேரத்தூரை சேர்ந்த அன்னபூரணி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


தருமபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிபட்டி, ஒடசல்பட்டி, பாப்பாரப்பட்டி, நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. பல இடங்களில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சாலையில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் மாலை நேரத்தில் இடியுடன் பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி போன்ற மலர் சாகுபடி மற்றும் காய்கறிகளுக்கு இந்த மழை உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.,

புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.நாகையில் கீழ்வேளூர், சிக்கல், வேதாரண்யம் உள்ளிட்ட இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் வெண்ணாறு, வெட்டாறு உள்ளிட்ட ஆறுகளின் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் பிரவாகம் எடுத்துள்ளது. மேலும், இந்த மழையால் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நெல்லையில் மாலை நேரத்தில் காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பாய்ந்தோடியது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சீசன் முடிந்த நிலையில், தண்ணீர் வரத்து உள்ளதால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விட்டு விட்டு கனமழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மழையில் நனைந்தபடியே இயற்கை எழிலை கண்டு ரசித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் தொடர் மழை காரணமாக பீமன் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டனர்.

இந்நிலையில், மேற்கு மத்திய வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம் மற்றும் புதுவையில் இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also watch

First published: September 23, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading