பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா - சட்டப்பேரவையில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா - சட்டப்பேரவையில் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி காரசார விவாதம்
டெல்டா
  • Share this:
சட்டப்பேரவையில் வேளாண் பாதுகாப்பு சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்திய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தச் சட்டத்தை விவசாயியாக இருந்து அறிமுகப்படுத்துவதில் மிகவும் பெருமைபடுகிறேன் என்றார். 

இந்தச் சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆம் தேதி இந்த சட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்திற்கு பதில் வந்ததா ? எனவும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சட்டமுன்வடிவு அனுமதி தரும் வகையில் உள்ளது அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

அதே போல இந்தச் சட்டத்தில் திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்கள் விடுபட்டதற்கான காரணங்கள் என்ன ? இந்த சட்டத்தில் உள்ள குழுவில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறாதது ஏன்? எனவும் கேள்வி எழுப்பிய மு.க.ஸ்டாலின், இந்தச் சட்டம் முழுமையாக விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றால் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


அதற்கு பதிலளித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, ’தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், விவசாயிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த அறிவிப்பை வெளியிட்டதாகவும், அறிவிப்பு வெளியிட்ட மறுதினமே மத்திய அரசுக்கு கடிதம் மூலமாக வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் வழங்கியிருப்பதாக மத்திய அரசு பதில் கடிதம் அனுப்பியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அறிவிக்கப்பட்டு பத்து நாட்களுக்குள் சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து சட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும், ஏற்கனவே உள்ள திட்டங்களைத் தடை செய்தால் சட்டச் சிக்கல்கள் வரும் என்பதால் இந்த சட்டமுன்வடிவை தற்போது கொண்டு வந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் தலைவர், வேளாண் மண்டல சட்டத்திற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும், இருப்பினும் விவசாயிகளுக்கு முழு பாதுகாப்பு வேண்டுமென்றால் இதனை தேர்வுக்குழுவுக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, திருச்சி, கரூர் அரியலூர் மாவட்ட விவசாயிகள் பிரதிநிதிகளாக மாவட்டக் குழுவில் இடம்பெறுவார்கள் எனவும் மேற்கண்ட மாவட்டங்களில் சில வட்டங்கள் டெல்டா பகுதிகளில் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னை எனவும் அதனை எதிர்பார்த்து காத்திருப்பதால் இந்த மசோதாவை நிறைவேற்றி தர கோரினார்.

தேர்வுக்குழுவுக்கு அனுப்ப மறுப்பதைக் கண்டித்து தி.மு.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு மீது நற்பெயர் வந்துவிடும் என்பதற்காக திமுகவினர் வெளிநடப்பு செய்வதாகவும், இதனைக் கூட அரசியலாக்குவது வருத்தமாக இருப்பதாக தெரிவித்தார். திமுக ஆதரவளிக்காவிட்டாலும் ஒட்டுமொத்த விவசாயிகள் ஆதரவளிப்பார்கள் என பேசியதைத் தொடர்ந்து சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து டெல்டா மாவட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்து பேசினர்.

Also see:


 
First published: February 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்