HEALTH SUPERINTENDENT SHOUTS AT A GOVERNMENT OFFICIAL WHO CAME TO PAY POSTAL VOTE WITHOUT WEARING A MASK IN KUMBAKONAM VAI
முகக்கவசம் அணியாமல் தபால் வாக்கு செலுத்த வந்த அரசு அதிகாரி: கொந்தளித்த சுகாதாரத்துறை மேற்பார்வையாளர்
முகக்கவசம் அணியாமல் தபால் வாக்கு செலுத்த வந்த அரசு அதிகாரி
கும்பகோணத்தில் முகக் கவசம் அணியாமல் தபால் வாக்கு செலுத்த வந்த அரசு அதிகாரிக்கு ரூ.200 அபராதம் விதிக்கும்படி சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் கோபமடைந்து, பின் கையெடுத்து கும்பிட்டு முகக்கவசம் அணியும்படி வலியுறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் நேற்று தபால் வாக்குகளை செலுத்தினர். அப்போது அங்கு தபால் வாக்கு செலுத்த வந்த சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் சங்கரன் என்பவர் அனைவரும் தவறாமல் மாஸ்க் அணியவும், தவறினால் ரூ.200 அபராதம் என பொறிக்கப்பட்டிருந்த பதாகை கழுத்தில் அணிந்தபடி வலம் வந்தார்.
அப்போது அங்கு நீண்ட வரிசையில் தபால் வாக்கு செலுத்த காத்திருந்த அரசு அலுவலர்களை சமூக இடைவெளி விட்டு நிற்குமாறும் முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தினார். அப்போது அங்கு முகக் கவசம் அணியாமல் தபால் வாக்கு செலுத்த வந்த அதிகாரி ஒருவரை கையை பிடித்து இழுத்து அவருக்கு ரூ.200 அபராதம் விதிக்குமாறு கூச்சலிட்டார்.
பின்னர் சங்கரன் தான் வைத்திருந்த முகக்கவசத்தை அவருக்கு வழங்கி கும்பகோணத்தில் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. எனவே தயவுசெய்து முகக்கவசத்தை அணிந்து வெளியில் வருமாறு கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொண்டார். இதனை பார்தத அனைவரும் அங்கு சமூக இடைவெளியுடன் நகர்ந்து நின்றனர்.