தமிழகம் முழுவதும் 20 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில்
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் படிப்படியாக நோய் தொற்று குறையத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 15 முதல் 20 மாவட்டங்களில் நோயின் பரவல் குறைந்துள்ளது என கூறினார்.
ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்கள் சவாலாக உள்ளது. இந்த மாவட்டங்களில் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டோர் மற்றும் மருத்துவமனைகள் என 2,11,000 நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். 5% பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்தார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களில் 91% பேர் 50 வயதுக்கு மேற்ப்பட்டோர். 70% பேர் தடுப்பூசியே செலுத்தாதவர்கள் அல்லது ஒரு தவனை தடுப்பூசி செலுத்தியவர்கள். 93% பேர் இணை நோய் உள்ளவர்கள். எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன் வர என வேண்டுகோள் விடுத்தார்.
சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் நோய்த்தொற்று குறைந்து வருகிறது. பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக்கொள்ள வேண்டும். புதுவகையான கொரோனா பரவி வருகிறது என சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவலை மட்டும் நம்ப வேண்டும் என பேசினார்.
கட்டுப்பாடுகள் மட்டும் தீர்வு தராது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடித்து முக கவசம் அணிதல் மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்வதே கொரோனா பரவலை குறைக்க முடியும் என மருத்துவ வல்லுநர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் தளர்வுகள் தரப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி நடத்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது என கூறினார்.
கேரளா, கர்நாடக, ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் சற்று சவாலாக உள்ளது என்றும் தொற்று குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இப்போது உள்ள ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கினால் கொரோனா பரவல் குறைய வாய்ப்புள்ளது என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ரயில் பயணத்துக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு கூறினாலும் தமிழ்நாட்டில் உள்ள கட்டுப்பாடுகள் தொடரும். இதை தளர்த்துவது குறித்து ஆலோசனை செய்தே முடிவு செய்யப்படும். தமிழகம் எப்போதும் கவனமாகவே முடிவுகளை எடுத்து வந்துள்ளது என தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்துவது சரியா என கேட்டதற்கு இரண்டாவது அலை போல் ஆக்சிஜன் தேவை இப்போது இல்லை, மருத்துவமனை படுக்கைகள் நிரம்பிவில்லை. எனவே சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.