பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 1,000 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் வரவில்லை - குழுக்கள் அமைத்து தேடும் பணியில் சுகாதாரத்துறை

பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த 1,000 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் வரவில்லை - குழுக்கள்  அமைத்து தேடும் பணியில் சுகாதாரத்துறை

கோப்புப் படம்

பிரிட்டனிலிருந்து ஒரு மாதத்துக்குள் தமிழகம் வந்ததில் 1,000 பேரை இதுவரையில் கண்டறியப்படமுடியவில்லை. அவர்களைத் தேடும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.

  • Share this:
கடந்த மாதம் 25ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்த சுமார் 2,300-க்கும் மேற்பட்டோரில் 1,000-க்கும் மேற்பட்டோர் இன்னும் பொது சுகாதாரத்துறை கண்காணிப்பு வளையத்துக்குள் வரவில்லை. அவர்களை கண்டறியும் பணிகளை சுகாதாரத்துறை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தடை அறிவிக்கப்பட்ட கடைசி இரண்டு நாட்களில் அதாவது டிசம்பர் 22, 23 தேதிகளில் பிரிட்டனிலிருந்து 49 பேர் தமிழகம் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் விமான நிலையங்களிலேயே கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதற்கு முன்பு தமிழகம் வந்தவர்கள் பல்வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டனர். எனவே, விமானங்கள் மூலம் நேரடியாக பிரிட்டனிலிருந்தோ அல்லது வேறு மாநிலங்களிலிருந்தோ வந்தவர்களின் விவரங்களைப் பெற்று அவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது சுகாதாரத்துறையிடம் பகிரப்பட்டுள்ளது.

இதில் 1,362 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் 1,035 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை. ஒன்பது பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர மீதமுள்ள சுமார் 1,000 பேரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

சிலர் தொலைபேசி எண்களை தவறாக கொடுத்துள்ளதால் அவர்களை உடனடியாக கண்டறிவது சவாலான காரியமாக உள்ளது. இந்நிலையில் சேகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள அவர்களது முகவரிகளில் அவர்களை நேரடியாக வீட்டுக்கு சென்று கண்டறிய பொது சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

104 உதவி எண் மூலமாக ஒரு சிலர் மட்டும் தாமாக முன் வந்து பொது சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை பிரிட்டனிலிருந்த வந்த10 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்த நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு அதில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். புனேவுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் உள்ளதா என கண்டறிந்து முடிவுகள் விரைவில் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: