• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தலைமை காவலர் to க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பி.. தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது

தலைமை காவலர் to க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பி.. தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது

கைதான தலைமைக் காவலர்

கைதான தலைமைக் காவலர்

ஒரு உயர் அதிகாரியான தன்னிடம் நீங்கள் விசாரணை நடத்துவதா?' எனக் கூறி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பிரச்சனை செய்துள்ளார்

  • Share this:
தொழிலதிபரின் சொத்தை அபகரிப்பதற்காக தலைமை காவலர் ஒருவர் தன்னை க்ரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி எனக்கூறி தொழிலதிபரின் வீட்டிற்கு சென்று பிரச்னை செய்ததால் தலைமை காவலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

சென்னை அண்ணாநகர் 6வது அவென்யூவை சேர்ந்தவர் ஸ்ரீதேவி உன்னிதன் (84). இவர் பிரபல ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிக்கும் நிறுவனமான சங்கர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் ஆவார். இவரது வீட்டுக்கு நேற்று மதியம் சரியாக 12 மணியளவில் காவலர் உடையில் வந்த ஒருவர் தன்னை க்ரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி எனவும் தன்னுடன் வந்த மற்ற இருவர்  மஃப்டியில் வந்த க்ரைம் பிராஞ்ச் போலீசார் எனக் கூறியும் ஸ்ரீதேவி உன்னிதனை கைது செய்ய முற்பட்டுள்ளார்.இதனால் ஸ்ரீதேவி உன்னிதனின் குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்துள்ளனர்.

போதையில் வந்திருந்த அந்த நபர் குடும்பத்தினர் கேட்ட கேள்விகளுக்கு முண்ணுக்குபின் முரணான பதில் அளித்தமையால் சந்தேகமடைந்த ஸ்ரீதேவி உன்னிதனின் குடும்பத்தினர் அவரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவருடன் வந்த மற்ற இருவரும் தப்பியோடியுள்ளனர்.

அண்ணா நகர் காவல் நிலையத்தில் 'தான் சைபர் க்ரைம் டிஎஸ்பி எனவும், வழக்கு ஒன்றிற்காக ஸ்ரீதேவி உன்னிதனை கைது செய்ய வந்திருப்பதாகவும் கூறி, ஒரு உயர் அதிகாரியான தன்னிடம் நீங்கள் விசாரணை நடத்துவதா?' எனக் கூறி காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் பிரச்சனை செய்துள்ளார்.
இதனால் மிரண்டு போன அண்ணாநகர் காவல் துறையினர் பிரச்சனை நடந்த பகுதி திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் காவலர் உடையில் வந்த அந்த நபரை திருமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

திருமங்கலம் காவல் நிலையத்திலும் டி.எஸ்.பி.யான தன்னிடம் பதவி குறைவான நீங்கள் விசாரணை நடத்த முடியாது எனக் கூறி பிரச்சனை செய்துள்ளார் அந்த நபர். சில மணி நேரத்திற்கு பிறகு திருமங்கலம் போலீசார் விசாரணையில் தன்னை டி.எஸ்.பி எனக் கூறி வந்த அந்த நபர் யானைக்கவுனி காவல் நிலைய தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ்(54) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து பணிக்குச் செல்லாமல் ஒழுங்கீனமாக நடந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
தனது வேஷம் கலைந்து விட்ட தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஸ்ரீதேவி உன்னிதன் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக அயனம்பாக்கத்தில் நான்கு கிரவுண்ட் இடம் வாங்கியுள்ளதும், அதன் அருகே உள்ள நிலம் தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ்க்கு சொந்தமான நிலம் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து ஸ்ரீதேவி உன்னிதனின் நிலம் தனக்கு சொந்தமான நிலம் என கூறி அவர்களிடம் தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் பிரச்சனை செய்து வந்துள்ளதும் ஸ்ரீதேவி உன்னிதனின் நிலத்திலுள்ள சுற்றுச் சுவர்களை தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் சேதப்படுத்தியதும் தெரியவந்தது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஸ்ரீதேவி உன்னிதன் நிலத்தின் காவலாளியை தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்துள்ளார். இதனால் திருவேற்காடு காவல்துறையினரால் அப்போதே வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் சிறைக்கு சென்று உள்ளார் என்பதும் தெரியவந்தது. சிறையிலிருந்து வெளியே வந்த தலைமை காவலரான டேவிட் ஆனந்தராஜ் தொடர்ச்சியாக ஸ்ரீதேவி உன்னிதனின் நிலத்தில் மதுபான பாட்டில்களை உடைத்து பிரச்சனை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அண்ணாநகரில் உள்ள ஸ்ரீதேவி உன்னிதனின் வீட்டுக்கு நேற்று மதியம் இரண்டு நபர்களுடன் தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் வந்து, தான் க்ரைம் பிராஞ்ச் டி.எஸ்.பி எனவும் தன்னுடன் வந்தவர்கள மஃப்டியில் வந்த காவலர்கள் எனவும் கூறி கைது செய்ய முற்பட்டு பிரச்சனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து தலைமை காவலரான டேவிட் ஆனந்தராஜன் மீது திருமங்கலம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்.

இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் தலைமை காவலர் டேவிட் ஆனந்தராஜ் தன்னை கிரைம் பிரான்ச் டிஎஸ்பி என கூறி ஸ்ரீதேவி உன்னிதன் குடும்பத்தினரிடம் பிரச்சனை செய்து பின்னர் அண்ணாநகர் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு விசாரணைக்குப் பிறகு அங்கிருந்து திருமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவர் உடுத்தியிருந்த உடையோ காவல் ஆய்வாளரின் உடை என்பதையும் மேலும் காவல் ஆய்வாளரின் உடையும் தவறாக அணிந்து வந்துள்ளார் என்பதையும் அண்ணாநகர் போலீசார் மற்றும் திருமங்கலம் போலீசார் கவனிக்கவில்லை என்பது வேடிக்கை என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Ramprasath H
First published: