முகப்பு /செய்தி /தமிழ்நாடு / எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொகுதி நிதி மூலம் திட்டம் வகுக்கலாம்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொகுதி நிதி மூலம் திட்டம் வகுக்கலாம்: அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை உயர்நீதிமன்றம்.

வேளாண் நிலங்களை பாதுகாக்கவும், தண்ணீர் தட்டுபாட்டை தீர்க்க, தடுப்பணையில் வீணாகும் கசிவு நீரை கிராமப்புற குட்டைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரசின் நடவடிக்கைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம், பருவமழை காலங்களில் வீணாகும் நீரை ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது தொடர்பாக திட்டம் வகுக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.

ஈரோடு மாவட்டம், ஒலக்காட்டுபதி தடுப்பணையில் இருந்து கசியும் நீரை, சூரிய மின்சக்தி மோட்டார்கள் மூலம் குழாய்கள் வழியாக முருங்கதொழுவு, கலிகவளசு மற்றும் புதுப்பாளையம் ஏரிகளுக்கு திருப்பிவிடுவதற்கான திட்டம் தமிழகத்தில் முதல்முறையாக அறிவிக்கப்பட்டது.

இதற்காக ஈரோடு மக்களவைத் தொகுதி எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க ஒப்புதல் தெரிவித்தார்.

கடந்த 2015-ம் ஆண்டு இந்தத் திட்டத்திற்கு 2015-ல் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டும் திட்டம் தொடங்கவில்லை என கூறி, முருங்கதொழுவு பஞ்சாயத்து முன்னாள் தலைவர் ரவி, கவுன்சிலர்கள் செந்தில் மற்றும் பழனிசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த 3 கிராமங்களுக்கு தண்ணீர் வசதி வழங்குவதற்கு, 23 லட்சம் ரூபாய் குழாய் பதிக்கவும், 12 லட்சம் ரூபாய் சூரிய மின் சக்தி மோட்டார்களுக்கு என மொத்தம் 35 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, பணிகள் நிறைவடையும் தருவாயில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி, வேளாண் நிலங்களை பாதுகாக்கவும், தண்ணீர் தட்டுபாட்டை தீர்க்க, தடுப்பணையில் வீணாகும் கசிவு நீரை கிராமப்புற குட்டைகளுக்கு கொண்டு சேர்க்கும் அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதே திட்டத்தை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என யோசனை தெரிவித்த நீதிபதி, எம்.பி - எம்.எல்.ஏ மேம்பாடு நிதியைப் பயன்படுத்தி, பருவமழை காலங்களில் வீணாகும் நீரை, கிராமப்புற ஏரி, குளங்களுக்கு திருப்பி விடுவது தொடர்பாக திட்டம் வகுக்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி யோசனை வழங்கினார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளும் இந்த திட்டத்தை 4 வார காலங்களில் முடிக்க செயற் பொறியாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Also see...

First published:

Tags: Chennai High court, Erode, Water management