புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை வழக்கு... சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

கோப்புப் படம்

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை என்பது இந்த மேல்முறையீடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று கூறி, இதுகுறித்து தனியார் கல்லூரிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை என்பது மாணவர்கள் தொடர்ந்த வழக்கின் இறுதி தீர்ப்பிற்க்கு உட்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுவையில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை தலா 55 இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கின.

இது குறித்த அறிவிப்பை ரத்து செய்து, இந்தக் கல்லூரிகளில் உள்ள தலா 150 இடங்களில், 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி, அபிராமி, ஸ்வேதா உள்ளிட்ட ஏழு மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில், 2006-ம் ஆண்டின் மாணவர் சேர்க்கை விதிகளின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டதாக மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்குத் தொடர்பாக பதிலளித்த புதுச்சேரி அரசு, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இடங்களை வழங்க மத்திய அரசு மறுத்து விட்டதாக தெரிவித்தது.

ஆனால், 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வகை செய்ய இயற்றப்பட்ட சட்டம் குறித்துச் சில கேள்விகள் எழுப்பப்பட்டு, அவை புதுச்சேரி அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி
இந்தக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க ஒப்புக்கொண்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை எனக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Also read... உருமாற்றம் பெற்ற கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு நீதிமன்றம் உத்தரவு!

இந்த உத்தரவை எதிர்த்து மாணவ மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை என்பது இந்த மேல்முறையீடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று கூறி, இதுகுறித்து தனியார் கல்லூரிகள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர். வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: