சேலம் பெருமாள் கோவில் சொத்துக்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்துல் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெருமாள் கோவில் அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், அந்த நிலம் வருவாய் துறை அதிகாரிகளின் உடந்தையுடன், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கோவிலையும், அதன் சொத்துக்களையும் மீட்கக்கோரிய இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, கோவிலுக்கு தகுதியான நபரை நியமிப்பதற்கான நடைமுறைகள் துவங்கியுள்ளதாகவும், அதன் பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலைய துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கோவிலில் நியமிக்கபட உள்ள தகுதியான நபர்கள் பற்றிய விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலைய துறைக்கு உத்தரவிட்டனர்.
Also read... கொரோனா பாதிக்கப்பட்ட தெருக்களை அடைக்க நடவடிக்கை - மாநகராட்சி ஆணையர் உத்தரவு
மேலும், இந்த கோவிலுக்கு சொந்தமான நிலங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.
கோவில் நிலத்தின் தற்போதைய உரிமையாளரை கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.