Home /News /tamil-nadu /

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம்!

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசு கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்தது செல்லும் - உயர்நீதிமன்றம்!

வேதா இல்லம்

வேதா இல்லம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • Last Updated :
வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற நிலம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அதிமுக தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மேல் முறையீட்டு மனு, நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் சுகுமார குருப் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.

அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சோமயாஜி, நினைவு இல்லம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டுக்கு பின்னர் தான் தீபா, தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்ததாகவும், நினைவு இல்லம் அமைப்பது பொது பயன்பாடா, இல்லையா என்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க முடியும் எனவும், வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த பிறப்பித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

ஆறு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா, பெண்கள் நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் பல திட்டங்களை நிறைவேற்றியதாகவும், இதை அடுத்த தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையிலும் நினைவு இல்லம் அமைக்க கொள்கை முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மெரினாவில் 80 கோடியில் நினைவிடம் கட்டப்பட்டுள்ள நிலையில் மற்றொரு நினைவு இல்லம் அமைக்க தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது எனவும், சென்னையில் ஏற்கனவே ராஜாஜி, காமராஜருக்கு இரு நினைவிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தீபக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், தனி நீதிபதி முன்பு வழக்கை எதிர்கொண்ட மாநில அரசு, தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யாமல் ஏற்கனவே சாவிகளை தங்களிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்.

தீபா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், கையகப்படுத்தியதில் தீவிர நடைமுறை தவறுகள் இருந்ததாகவும், இந்த மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்ய அதிமுகவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்பதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், நினைவு இல்லமாக மாற்ற பொது பணத்தை செலவு செய்வதற்கு பதில், மக்கள் நலனுக்கு செலவிட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுப்படியும், நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு யோசனையை ஏற்றும், ஒரு நினைவிடம் உள்ள நிலையில், நினைவு இல்லம் தேவையில்லை என தனி நீதிபதி உத்தரவை ஏற்றும் மேல் முறையீடு செய்யவில்லை என விளக்கமளித்தார்.

Also read... தமிழகத்தில் ஆக்சிஜன் வசதி இரு மடங்காக உயர்வு - அமைச்சர் மா சுப்பிரமணியன் பேட்டி!

மேலும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி சாவி தற்போது தீபா மற்றும் தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது என்றும் தெரிவித்தார்.

Also read... அவினாசியில் மசூதி விரிவாக்கம் செய்யும் பணிக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை...!

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், நிலம் கையகப்படுத்தியதில் நடைமுறை தவறுகள் இருந்ததாக தெரிவித்தனர். மேலும், பொது நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படவில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காகவே கையகப்படுத்தப்பட்டதாக தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதி முன்பு இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது அதில் தங்களை இணைத்து கொள்ளாத அதிமுக, தற்போது தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தது ஏன் என கேள்வி எழுப்பி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Madras High court, Vedha House

அடுத்த செய்தி