ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை... 3-வது குழந்தைக்கு பேறுகால விடுமுறையை ரத்துசெய்து நீதிமன்றம் உத்தரவு!

முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை... 3-வது குழந்தைக்கு பேறுகால விடுமுறையை ரத்துசெய்து நீதிமன்றம் உத்தரவு!

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பெற்ற மத்திய அரசு பெண் ஊழியருக்கு, மூன்றாவது குழந்தைக்கு ஊதியத்துடன் பேறு கால விடுமுறை வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரக்கோணம் சிஐஎஸ்எப் படையில் அதிகாரியாக பணியாற்றிய ஆயிஷா பேகம், முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தார். அப்போது அவருக்கு, ஊதியத்துடன் 180 நாட்கள் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது முறையாக கருவுற்ற அவர், ஊதியத்துடன் விடுப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்தார். அவரது கோரிக்கையை சி.ஐ.எஸ்.எப்., உயர் அதிகாரிகள் நிராகரித்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, முதல் பிரசவத்தில் இரட்டைக் குழந்தை பிறந்திருந்ததால், இரண்டாவது பிரசவத்துக்கு ஊதியத்துடன் பேறுகால விடுமுறை வழங்க கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், மத்திய தொழில் பாதுகாப்பு படை இயக்குநரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, மத்திய சிவில் சர்வீஸ் விதிகளில், இரண்டு குழந்தைகளுக்கு மேல், ஊதியத்துடன் விடுப்பு வழங்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி, மத்திய அரசு ஊழியரான ஆயிஷா பேகம், மூன்றாவது குழந்தைக்கு பேறுகால சலுகைகள் கோர முடியாது எனக் கூறி, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதுபோன்ற அரிதிலும் அரிதான நேரங்களில் இரண்டாவது பிரசவத்துக்கும் சலுகைகளுடன் பேறுகால விடுமுறை வழங்குவது தொடர்பான விதிகளை தளர்த்த மத்திய அரசு தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் அறிவுறுத்தியுள்ளனர்.

Also see...

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Pregnancy