பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு வழங்குவதற்காக அதிக விலைக்கு 40,000 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்த அரசாணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக 40,000 டன் அரிசி கொள்முதல் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த அரிசி அதிக விலைக்கு வாங்கப்படுவதாக கூறி, திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த ஜெயசங்கர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், ஒரு கிலோ அரிசி 33 ரூபாய் 50 காசுகளுக்கு என்ற அடிப்படையில் 40,000 மெட்ரிக் டன் அரிசி கொள்முதல் செய்ய 134 கோடி ரூபாயை ஒதுக்கி அரசு அரசாணை பிறப்பித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய உணவு கழகம் ஒரு கிலோ அரிசியை 20 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்வதாகவும், அதில் இருந்து அரிசி கொள்முதல் செய்யும் பட்சத்தில் 54 கோடி ரூபாய் மிச்சமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுசம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிய போது, இந்திய உணவு கழக அரிசி தரமற்றது எனவும், அரிசி கொள்முதல் செய்வது தொடர்பான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தை பின்பற்றாமல், அதிக விலைக்கு அரிசி கொள்முதல் செய்வது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும், அரிசி கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்து பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
Also read... கூட்டுறவுக் கடன் சங்கங்களால் வழங்கப்படும் காசோலை தொடர்பாக அரசு பிறப்பித்த சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை!
இந்த வழக்கு நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மத்திய அரசின் அனுமதியுடன் தான் அரிசி அனுப்பப்படுவதாகவும், அவசர நிலையை நேரங்களில் கொள்முதல் செய்ய டெண்டர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் விலக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசுத்தரப்பு வாதத்தை ஏற்ற நீதிபதிகள், வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, விசாரணையை கோடை விடுமுறைக்கு பின் தள்ளிவைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.