முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடிபோதையில் காரை ஓட்டி மூன்று பேர் உயிரிழந்த வழக்கு: பெண் மருத்துவரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

குடிபோதையில் காரை ஓட்டி மூன்று பேர் உயிரிழந்த வழக்கு: பெண் மருத்துவரை விடுவிக்க நீதிமன்றம் மறுப்பு

 நீதிமன்றம்

நீதிமன்றம்

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவரான அன்புசூர்யா என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, நள்ளிரவு 3 மணியளவில் மெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

குடிபோதையில் காரை ஓட்டி மூன்று பேர் உயிரிழந்த வழக்கிலிருந்து, காரில் பயணித்த பெண் மருத்துவரை விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவரான அன்புசூர்யா என்பவர் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு, நள்ளிரவு 3 மணியளவில் மெரினா கடற்கரை சாலையில் குடிபோதையில் வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார். அந்த கார் மோதியதில் இரண்டு மீன் வியாபாரிகள், ஒரு தலைமை காவலர் பலியான நிலையில், மூன்று பேர் படுகாயமடைந்துடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன.

இதுதொடர்பாக, அன்புசூர்யா மீதும், அவருடன் காரில் பயணித்த அவரது மூத்த சகோதரி லட்சுமி மற்றும் நண்பர் செபஸ்டியன் கிருஷ்ணன் ஆகிய மூன்று பேர் மீது சென்னை காவல் துறை வழக்குப்பதிவு செய்தது.

காரை ஓட்டாமல், பயணம் மட்டுமே செய்த நிலையில் தன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி லட்சுமி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. இந்த உத்தரவு மறு ஆய்வு செய்து தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

Also read... Chennai Power Cut: சென்னையில் வரும் சனி (06-08-2022) அன்று முக்கிய பகுதிகளில் மின்தடை!

இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் தனது சகோதரர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தும், வாகனம் ஓட்டுவதை தடுக்காமல் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால், அவர் மீதான வழகை ரத்து செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள தீர்ப்பில், குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றத்தில் ஓட்டுனர் மட்டுமல்லாமல், அவருடன் பயணித்த மற்றவர்களுக்கும் சமமான பொறுப்பிருப்பதால், மருத்துவர் லட்சுமியை வழக்கிலிருந்து விடுவிக்க எவ்வித தகுதியும் இல்லை என கூறி, மருத்துவர் லட்சுமியை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்து உத்தரவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Madras High court