நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்கிற்குள் நுழையவா என மாமல்லபுரம் பேருராட்சியிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் ஆகியவை பக்கிங்ஹாம் கால்வாயில் கொட்டப்பட்டு, கால்வாய் பகுதி குப்பை பிரிக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தனேஜா வீட்டுமனை உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில், மாசு கட்டுப்பாட்டு சட்டத்தின் விதிகளைப் பின்பற்றி, குப்பை பிரிக்கும் பகுதி அமைக்காதது குறித்து ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் மட்டுமே அனுப்பியது என்றும்,ஆனால் அதன்பின்பு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், குப்பைக் கிடங்கின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்ய பெண் வழக்கறிஞர் என்.டி. நானே என்பவரை நீதிமன்ற ஆணையராக நியமித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், குப்பை கிடங்கு செயல்படவில்லை எனக் கூறி புகைப்பட ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
Also read... நகராட்சி தலைவர் தேர்தல் செல்லாது என அறிவிக்ககோரி அதிமுக கவுன்சிலர் வழக்கு - தள்ளுபடி செய்த நீதிமன்றம்
அதேசமயம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், விதிமீறல் தொடர்பாக மாமல்லபுரம் நகராட்சி செயல் அதிகாரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நீதிமன்ற ஆணையர் அளித்த அறிக்கையில், 2008ம் ஆண்டு முதல் கிடங்கு செயல்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை முறையாக பராமரிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
முறையாக பராமரிக்காதது துரதிருஷ்டவசமானது எனவும், சம்பந்தப்பட்ட அதிகாரியை தண்டிக்க வேண்டும் என வலியுறுத்திய நீதிபதிகள், பேரூராட்சியில் நுழைவு கட்டணம் வசூலிப்பது குப்பை கிடங்குக்குள் நுழையவா எனவும் கேள்வி எழுப்பி, அரசு அறிக்கையை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.