பேனர் விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், தனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் கட்சியினர் பேனர் வைத்ததற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள மனுதாரர்கள், முறையான விசாரணை நடத்தாமல் காவல்துறையினர் இயந்திரத்தனமான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும்,
பெரும்பான்மையான விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தங்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Also see...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banner case