திமுக எம்.எல்.ஏ.க்கள் மீதான குட்கா உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்த தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட தீர்ப்பு நகல் இல்லாமல் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய சட்டப்பேரவை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2017 ம் ஆண்டு சட்டப் பேரவைக்குள் குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு அனுப்பிய உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்ததுடன், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாகக் கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூடிய உரிமைக் குழு, மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, மீண்டும் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 10 ஆம் தேதி தனி நீதிபதி புஷ்பா சத்தியநாராயண தீர்ப்பு வழங்கிய நிலையில், இது வரை நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட அசல் தீர்ப்பு வெளியாகவில்லை.
Also read... மதுரை விமான நிலைய வாயிலில் ஆபத்தான கொரோனா கவச உடை: நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?
இந்நிலையில், தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட அசல் தீர்ப்பின் நகல் இல்லாமல் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக்கோரி சட்டப்பேரவை செயலாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்திகுமார் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அவரது சான்றளிக்கப்பட தீர்ப்பு நகல் இல்லாமலேயே மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.