உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி., எஸ்.டிக்கு இட ஒதுக்கீடு கோரி மனு...! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

உள்ளாட்சி தேர்தலில் எஸ்.சி., எஸ்.டிக்கு இட ஒதுக்கீடு கோரி மனு...! தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
சென்னை உயர்நீதிமன்றம்.
  • News18
  • Last Updated: November 26, 2019, 11:36 AM IST
  • Share this:
உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி துணை மேயர், நகராட்சி துணைத் தலைவர், கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ. செ.கு.தமிழரசன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புக்களான மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சிகளில் துணை தலைவர், கிராம பஞ்சாயத்துக்களில் துணைத் தலைவர் போன்ற மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, சட்டம் கொண்டு வரலாம் என 2012 ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.

இந்த உத்தரவின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புக்களில் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படும் துணை மேயர், துணைத் தலைவர் போன்ற பதவிகளில், பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், இந்திய குடியரசு கட்சி நிறுவனருமான செ.கு.தமிழரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.


அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள், 33 மாவட்ட பஞ்சாயத்துக்கள், 152 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள், 388 பஞ்சாயத்து ஒன்றியங்கள், 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் என, 13,870 பதவிகள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

இதுதவிர, உள்ளாட்சி அமைப்புக்களில் பல்வேறு நிலைக் குழுக்களும் உள்ளன… இக்குழுக்களில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டால், நான்கு மாநகராட்சிகளில் துணை மேயர், 46 நகராட்சிகளில் துணைத் தலைவர், 168 பேரூராட்சிகளில் துணைத் தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்தில் ஒரு துணைத் தலைவர், 3,786 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகள் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு கிடைக்கும் எனக் கூறியுள்ள அவர், துணைமேயர், துணைத் தலைவர் பதவிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி அரசுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.உள்ளாட்சி அமைப்புகளின் துணை மேயர், துணைத் தலைவர் பதவிகளில் பட்டியலின மற்றும் பழங்குடியின பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வரை உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, தமிழக தலைமைச் செயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளர், மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 7 ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

Also see...
First published: November 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading