அம்பேத்கர் புகைப்படம் வைத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி அதிகாரி வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அம்பேத்கர் புகைப்படம் வைத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி அதிகாரி வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அம்பேத்கர்
சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த கெளரிசங்கர்,கடந்த 2004ம் ஆண்டு அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாக 2006ம் ஆண்டு வங்கி அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மத்திய நிதி அமைச்சக சுற்றறிக்கை படி அலுவலகங்களில் அம்பேத்கர் புகைப்படம் வைக்கலாம் என்பதால், புகைப்படம் வைத்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவருக்கு சேர வேண்டிய பண பலன்களை நிலுவையின்றி வழங்க பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி வந்த கெளரிசங்கர்,கடந்த 2004ம் ஆண்டு அலுவலக அறையில் அம்பேத்கரின் புகைப்படத்தை மாட்டியதாக 2006ம் ஆண்டு வங்கி அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வங்கி நிர்வாகத்தின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மத்திய தொழிலாளர்கள் தீர்ப்பாயம், கெளரிசங்கருக்கு மீண்டும் பணி வழங்க 2012ம் ஆண்டு உத்தரவிட்டது.
தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து வங்கி சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வங்கியின் பணியிடை நீக்கம் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, கெளரிசங்கர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி துரைசாமி, நீதிபதி சத்யநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வங்கிகளில் தேச தந்தை மகாத்மா காந்தியின் புகைப்படத்தை மட்டுமே வைக்க அனுமதி உள்ளது. மற்ற தலைவர்களின் படங்களை வைப்பதற்கு அனுமதி இல்லை. புகைப்படங்களை வைக்க வங்கியின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும். அவ்வாறு அனுமதி இல்லாமல் தலைவர்களின் படங்களை வைக்க அனுமதித்தால், அனைத்து ஊழியர்களும் தங்கள் விருப்பமான தலைவர்களின் படங்களை வைக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மத்திய பொருளாதார விவகாரத்துறையின் சுற்றறிக்கையின் படி அம்பேத்கர் புகைப்படத்தை அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் வைக்கலாம் என்ற சுற்றறிக்கையை வங்கி நிர்வாகம் கவனத்தில் கொள்ளவில்லை. அதனால், மத்திய தொழிலாளர் தீர்ப்பாயத்தின் 2012 உத்தரவின் படி, வங்கி நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட கெளரிசங்கருக்கு சேர வேண்டிய பணபலன்களை நிலுவை இல்லாமல் உடனே வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.