• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நளினி கைதானது முதல் அரசின் தீர்மானம் வரை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

நளினி கைதானது முதல் அரசின் தீர்மானம் வரை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

நளினி

நளினி

  • Share this:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கைதானது, விடுவிக்க அரசு தீர்மானம் நிறைவேற்றியது வரையிலான முழு விவரங்களை ஏப்ரல்7-ம் தேதி தாக்கல் செய்ய நளினி தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க, தமிழக அமைச்சரவை 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய ஆளுநரின் செயலை அரசியல்சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டுமென்றும், ஆளுனரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிடக் கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், மாருராம் என்பவர் தொடர்ந்த வழக்கில் ஆளுனர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அமைச்சரவை முடிவு ஆளுநரை கட்டுப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், ஆளுனருக்கு என்று தனிப்பட்ட முறையில் அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தன்னை விடுவிக்க கோரி நளினி நான்காவது முறையாக நீதிமன்றத்தை நாடியிருப்பதாகவும், இந்தியாவிலேயே அதிக காலம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒரே பெண் கைதி நளினி எனவும் குறிப்பிட்டார்.

ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளில் கடமை தவறும் போது நீதிமன்றம் தலையிட்டு விசாரணை நடத்தலாம் எனவும் குறிப்பிட்டார்.

7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார்.

தமிழக அரசு அனுப்பிய பரிந்துரையின் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் தவறிவிட்டதாக புகார் தெரிவித்தார். தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரை விடுதலை செய்ய ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதாகவும் வாதிட்டார்.

10 ஆண்டு, 14 ஆண்டு மற்றும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவரை விடுவிப்பதற்கான திட்டம் தமிழகத்தில் உள்ளது எனவும், அதன் அடிப்படையில் 2002ம் ஆண்டே விடுதலைக்கு நளினி தகுதி பெற்றிருந்தார் என வாதிட்டார்.

ஆளுநரின் செயலை அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என அறிவிக்க கோரிய இந்த மனு விசாரணைக்கு உகந்தது தானா என்பதை முடிவு செய்ய வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ராஜிவ் கொலை வழக்கில் 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டது முதல் விடுதலை செய்ய அமைச்சரவை பரிந்துரைத்தது வரையிலான முழு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: