HC ORDERS CBCID AND CRIMINILOGY DEPARTMENT OFFICIALS TO VISIT UNIVERSITIES TO VERIFY APPLICATIONS OF CURRENT MEDICAL STUDENTS VIN
மருத்துவ மாணவர்களின் விண்ணப்பங்களை சிபிசிஐடி ஆய்வு செய்ய உத்தரவு!
கோப்புப் படம்
நீட் தேர்வின் போது அரசு மருத்துவ மாணவர்களின் கைரேகை, படிவங்களில் பெறப்பட்டதா அல்லது பயோமெட்ரிக் மூலம் பெறப்பட்டதா என நாளை தேசிய தேர்வு முகமை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிகர் நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பு பயின்று வரும் மாணவர்களின் விண்ணப்பங்களை சிபிசிஐடி மற்றும் தடயவியல்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் ஆள்மாறாட்டம் தொடர்பாக அரசு மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவுகளை சிபிசிஐடியிடம் வழங்க நீதிபதி கிருபாகரன் அமர்வு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு மருத்துவ மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடி-யிடம் வழங்கிவிட்டதாக தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு சிபிசிஐடி தரப்பில், மாணவர்களின் கைரேகை பதிவுகள் சிடி-யில் வழங்கப்பட்டிருப்பதாகவும், தங்களுக்கு மாணவர்களின் அசல் கைரேகை பதிவு வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, இந்தாண்டு அரசு மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் 4250 மாணவர்களில் 54 மாணவர்களை தவிற மற்றவர்கள் தனியார் நீட் பயிற்சி மையத்தில் பயின்றுள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தனியார் நீட் பயிற்சி மையங்கள் முறையாக அனுமதி பெற்று இயங்குகிறதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மையங்களை யார் கண்காணிக்கிறார்கள் என கேள்வி எழுப்பினர்.
மேலும், அரசு ஆசிரியர்கள் தனியார் நீட் பயிற்சி மையத்தில் வகுப்புகள் எடுப்பதாகவும், தனியார் மையங்களில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினர்.
இதனையடுத்து, நீட் தேர்வின் போது அரசு மருத்துவ மாணவர்களின் கைரேகை, படிவங்களில் பெறப்பட்டதா அல்லது பயோமெட்ரிக் மூலம் பெறப்பட்டதா என நாளை தேசிய தேர்வு முகமை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிகர் நிலை பல்கலைகழகங்களில் மருத்துவ படிப்பு பயின்று வரும் மாணவர்களின் விண்ணப்பங்களை சிபிசிஐடி மற்றும் தடயவியல் அதிகாரிகள் ஒரு வார காலத்திற்குள்
நேரில் சென்று ஆய்வு செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பல்கலைகழக முதல்வர் முன்னிலையில் இந்த ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்றும் இதை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.