ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பிரச்சாரத்தின் போது அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கை சுட்டிக்காட்டி பேச கூடாது - அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

பிரச்சாரத்தின் போது அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கை சுட்டிக்காட்டி பேச கூடாது - அரசியல் கட்சிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் எஸ்.பி வேலுமணி

அமைச்சர் எஸ்.பி வேலுமணி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான மாநகராட்சி டெண்டர் வழக்கை சுட்டிக்காட்டி பேச கூடாது அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் ஜெயராம் வெங்கடேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சியில் 220 டெண்டரில் முறைகேடு நடந்திருப்பதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகாரில் ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்திருப்பதாகவும், அதில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என முதலமைச்சர், அமைச்சரவை, தலைமை செயலாளருக்கு அறிக்கை அனுப்பியதாகவும், அதை அவர்கள் ஏற்றுகொண்டதால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மனுதாரர் தரப்பில், ஆரம்பகட்ட விசாரணை முடிவடைந்தாலும் அமைச்சருக்கு நற்சான்று அளிக்கப்படவில்லை என்றும் இந்த வழக்கை நேரடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிரப்பு தெரிவித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி தரப்பு, மனுதாரரின் கோரிக்கையை ஏற்க கூடாது என்றும் முதற்கட்ட விசாரணையில் அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்பு துறை அறிக்கை அளித்திருப்பதாகவும், தேவைப்பட்டால் இந்த அறிக்கையை எதிர்த்து மனுதாரர் மாவட்ட நீதிமன்றத்தை தான் அனுக வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Also read... கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது மக்களுக்காக தான் இருக்க வேண்டும் - நீதிமன்றம் அறிவுரை!

இதனையடுத்து, தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழ்நிலையில் இந்த வழக்கை விசாரிப்பது முறையாக இருக்காது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

மேலும்,தேர்தல் பிரச்சாரத்தின் போது எஸ்பி.வேலுமனிக்கு எதிரான இந்த வழக்கை சுட்டிக்காட்டி அரசியல் கட்சியினர் பேச கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Minister sp velumani