நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் ஆகியோரின் முன் ஜாமீன் மனுக்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்னை இருந்து வந்தது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயப்பிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யபட்ட ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ஜெயக்குமாரின் மகள் ஜெயபிரதீபா மற்றும் மருமகன் நவீன் குமார் ஆகியோரின் முன்ஜாமீன் கோரிய மனுவை ஆலந்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், தான் மைனராக இருந்ததால் தந்தையும், சகோதரர் மகேசும் மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்ததாகவும், தந்தை மறைவிற்கு பிறகு மகேஷ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Also read... சென்னையில் பைக் சாகசம்.. காவல் உதவி ஆய்வாளர் மகன் உள்ளிட்ட 5 இளைஞர்கள் கைது..
6 வருடங்களுக்கு முன்பான சம்பவத்தில் தாமதமாக புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன்பின்னர் 8 மாதங்கள் கழித்து தங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பொய் புகாரில் பதிவான வழக்கில், இந்த விவகாரத்தில் எந்தவித தொடர்பும் இல்லாத முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப் பதியபட்டுள்ளதாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரினர்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.