ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை கோரிய மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், நபார்டு கடனுதவியுடன் 38.72 கோடி ரூபாய் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 23ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதில், ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, கொம்பனைபுதூரில் குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்ட தடை விதிக்க கோரி கொளத்துபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தடுப்பணை கட்ட உத்தேசித்துள்ள பகுதியை ஆய்வு செய்த தொழில்நுட்ப குழு, இந்த இடம் தடுப்பணை கட்ட உகந்ததல்ல என தெரிவித்துள்ளதாகவும், மழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இந்த பகுதியில் தடுப்பணை கட்டினால், அப்பகுதியில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்துபாளையத்தில் தடுப்பணையை மாற்றி அமைக்கும்பட்சத்தில் அங்கு நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளதாகவும், இதுசம்பந்தமாக அரசுக்கு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
Also read... ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: நீதிமன்றத்தில் போலீஸார் வைத்த கோரிக்கை
அதனால் தடுப்பணையை கொளத்துபாளையத்தில் கட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வு, 4 வாரங்களில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.