வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை எழுத்து பூர்வமாக நாளை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு தனி நீதிபதி சத்தியநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தி.மு.க தரப்பில் வழக்கறிஞர் வில்சன், ‘சில வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரம் இல்லாத நபர்கள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட வேண்டும். பல இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படவில்லை..
தி.மு.க முன்னணி வகித்த பல இடங்கள் குறித்த முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை. வெற்றி பெற்ற பல தி.மு.க வேட்பாளர்களுக்கு இதுவரை வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படவில்லை. பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி எடுக்காமல் மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை என தேர்தல் ஆணையர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது எந்த வகையில் நியாயம். பல இடங்களில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்புகள் திரும்ப பெறுகின்றனர். இன்று இரவு வாக்குபெட்டிகளை மாற்ற முயற்சி நடக்கிறது’ என்று வாதத்தை முன்வைத்தார்.
அவரைத் தொடர்ந்து, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘91,975 பதவிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றது. கிராமப் பஞ்சாயத்து தலைவருக்கான 9,624 பதவிகளுக்கு 2,660 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றியங்களுக்கான 5,090 பதவிகளுக்கு 909 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட பஞ்சாயத்துக்கான 515 பதவிகளில் 3 முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணும் நடைமுறைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்து கண்காணிக்கபடுவதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. சேலத்தில் இதுவரை 30 சதவீத முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க பொத்தம் பொதுவாக தான் குற்றச்சாட்டு தெரிவிக்கிறார்களே தவிர முறைகேடு செய்ததாக யாரையும் குறிப்பிட்டு புகார் அளிக்கவில்லை’ என்று வாதத்தை முன்வைத்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடைபெறவில்லை என்று நாளை எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்கவேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருப்பதை மாநிலத் தேர்தல் ஆணையம் உறுதி செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local Body Election 2019