பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக பதிவிட்டதாக பதிவான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஆளுனராக பன்வாரிலால் புரோஹித் இருந்தபோது பெண் பத்திரிகையாளர் ஒருவர் அவமதிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பெண் பத்திரிகையாளர்கள் பற்றி சமூக வலைதளங்களில் பரவிய தகவலை, பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் பகிர்ந்திருந்தார்.
இது தொடர்பாக பத்திரிக்கையாளர் மிதார் மொய்தீன் என்பவர் கொடுத்த புகாரில், எஸ்.வி. சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, எஸ்.வி.சேகர் தரப்பில், சமூக வலைதளத்தில் தன்னுடைய பதிவை நீக்கிவிட்டதாகவும், மன்னிப்பும் கேட்கப்பட்டதாகவும், நீதிமன்றத்திலும் மற்றொரு முறை மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவில் உள்ள நபர் ஒருவரின் கருத்தையே தாம் பகிர்ந்ததால் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது. காவல்துறை தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு முறைமுறை கூட எஸ்.வி.சேகர் விசாரணைக்காக ஆஜராகவில்லை என தெரிவிக்கப்பட்டது.
Also read... வேலூரில் இரவு நேரத்தில் இயங்கும் ஆட்டோக்களுக்கு கட்டுப்பாடுகள்...
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ஏப்ரல் 2ம் தேதி மத்திய குற்றப்பிரிவு காவல்துறை முன்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென எஸ்.வி.சேகருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அப்போது பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் எழுதிய அமெரிக்க வாழ் தமிழர் குறித்த அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.