ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பரோலில் செல்லும் கைதிகளிடம் பணம் வசூல் - ஊழல் புகாரில் நடவடிக்கை என நீதிபதிகள் எச்சரிக்கை

பரோலில் செல்லும் கைதிகளிடம் பணம் வசூல் - ஊழல் புகாரில் நடவடிக்கை என நீதிபதிகள் எச்சரிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

பரோலில் வரும் கைதிகளின் பாதுகாப்புக்குச் செல்லும் காவல்துறையினர், பணம் வாங்குவது குறித்து தெரியவந்தால் துறைரீதியான நடவடிக்கை மட்டுமல்லாமல், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

சேலத்தைச் சேர்ந்த ஆயுள் தண்டனைக் கைதி ராதாகிருஷ்ணன், மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காகவும், மகள்களின் படிப்பு செலவுக்காகவும் பரம்பரைச் சொத்தை விற்பனை செய்வதற்கு ஏதுவாக ஒரு மாத பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வு, ராதாகிருஷ்ணனுக்கு 10 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டது.

விசாரணையின் போது, பரோலில் விடுதலையாகும் கைதிகளின் பாதுகாப்புக்காக செல்லும் காவல்துறையினர், கட்டணம் என்ற பெயரில் பணம் வசூலிப்பதாக நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் கைதிகள், பரோலில் வரும் போது பணம் கேட்பது லஞ்சம் தான் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுபோன்ற செயல்பாடுகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறைரீதியான நடவடிக்கை மட்டுமல்லாமல், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் உத்தரவிடப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

பரோலில் வரும் கைதிகளிடம் பணம் பெறக் கூடாது என்பதை உறுதி செய்யும்படி சிறைத்துறை ஐ.ஜி.க்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ராதாகிருஷ்ணனுக்கு பரோல் கோரி 2019 ம் ஆண்டு செப்டம்பர் மாதமே மனு அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் அதை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை எனவும், அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் தெரிவித்தார்.

பரோல் கோரிய விண்ணப்பங்கள் மீது உத்தரவு பிறப்பிக்க எந்த காலவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதிகள், பரோல் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும், விண்ணப்பித்த ஒரு வாரத்தில் சிறை அதிகாரியும், உள்ளூர் காவல் நிலைய உதவி ஆய்வாளரும் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும், அதை சிறைத்துறை அதிகாரிகள் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், அதைப் பெற்ற ஒரு வாரத்தில் அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Also read... புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலை அவமதிப்பு - கிரண் பேடி வரும் பாதையை மறித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் போராட்டம்

பரோல் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்க தவறியபட்சத்தில் கைதிகளின் சட்டப் போராட்டங்களுக்கு ஏற்படும் செலவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளே ஏற்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டனர்.

சட்டத் திருத்தம் கொண்டு வரும் வரை, 2 வார காலக்கெடுவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 27 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Prison