பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹ 10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு

கொரோனா வைரசுக்கான மருந்து தயாரிக்க 'கொரோனில்' என்ற பெயரை பதஞ்சலி நிறுவனம் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்துக்கு ₹ 10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவு நிறுத்தி வைப்பு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: August 14, 2020, 4:42 PM IST
  • Share this:
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த ஆருத்ரா இன்ஜினியர்ஸ் என்ற நிறுவனம், கனரக தொழிற்சாலைகளில் இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவையை ‘கொரோனில் 92 பி’, ‘கொரோனில் 213 எஸ்பிஎல்’ என்ற பெயரில் தயாரித்து வருகிறது. கொரோனில் என்ற பெயருக்கு வணிகச்சின்னத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த வணிகச் சின்னம் 2027 ம் ஆண்டு வரை அமலில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசுக்கு 'கொரோனில்' என்ற மருந்து கண்டுபிடித்துள்ளதாக பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளதாகவும், இதன்மூலம் தங்கள் நிறுவனத்தின் வணிகச் சின்னத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் கூறி, ஆருத்ரா இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்கக் கோரியும், தடை உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரியும் பதஞ்சலி நிறுவனமும், திவ்யா யோக் மந்திர் நிறுவனமும் மனுக்கள் தாக்கல் செய்தன.


இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வணிகச் சின்ன பதிவுத்துறையில் கொரோனில் என்ற பெயரில் ஏதேனும் பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா என விசாரிக்காமல், அதே பெயரில் மாத்திரை தயாரித்துள்ளதால், கொரோனில் என்ற பெயரை பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

மேலும், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனம் எனக் கூறும் பதஞ்சலி, கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் சொல்லி, மக்களின் அச்சத்தையும், பீதியையும் பயன்படுத்தி மேலும் லாபம் பார்க்க முயற்சிப்பதாகக் கூறி, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அபராதமாக விதிக்கப்பட்டுள்ள 10 லட்சம் ரூபாயில், 5 லட்சம் ரூபாயை, சேவை மனப்பான்மையுடன் மக்களுக்கு சிகிச்சை வழங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும், 5 லட்சம் ரூபாயை அரும்பாக்கம் அரசு யோகா, இயற்கை மருத்துவக் கல்லூரிக்கும் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.பதஞ்சலி நிறுவனம் தயாரித்துள்ள கொரோனில் மருந்து என்பது எதிர்ப்பு சக்தி மருந்து தானே தவிர, கொரோனாவை குணப்படுத்தாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

Also read... BREAKING | நம்பிக்கை வாக்கெடுப்பில் அசோக் கெலாட் அரசு வெற்றி

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளையும் தொடர்ந்த மேல் முறையீடு வழக்குகள் இன்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில், கடந்த ஜூன் மாதம் ஆயூஷ் அமைச்சகம் மற்றும் உத்தரகாண்ட் அரசின் முறையான அனுமதி பெற்றே 'திவ்யா கொரோனில்' மருந்து தயாரித்ததாகவும், ஜுலை மாதம் விற்பனையை தொடங்கிவிட்ட நிலையில், தனி நீதிபதியின் கடுமையான உத்தரவால் தங்கள் நிறுவனத்திற்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், தங்கள் நிறுவனம் மட்டுமல்லாமல் 'கொரோனா' என்ற பெயரை கொண்டு ஏற்கனவே 6 நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தங்களுக்கு எதிராக எந்த மருந்து நிறுவனமும் வழக்கு தொடராத நிலையில், இயந்திரங்களை சுத்தப்படுத்துவதற்கான ரசாயன கலவை தயாரிக்கும் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவை 2 வார காலம் நிறுத்தி வைத்த நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.
First published: August 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading