HC HAS SAID THAT INVOLVING HUMANS IN SCAVENGING IS AN INHUMANE ACT VIN
கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத்தன்மையற்ற செயல் - உயர் நீதிமன்றம்!
மாதிரி படம்
சுத்தம் செய்யும் பணியின் போது விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது மனிதத்தன்மையற்ற செயல் என தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதை தடை செய்யவும், சுத்தம் செய்யும் பணியின் போது விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களுக்கு போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாதாள சாக்கடைகளிலும், கழிவு நீர் தொட்டிகளிலும் விஷவாயு தாக்கி பலியானோரின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த நடைமுறை தற்போதும் தொடர்கிறதா? இல்லையா என்பதை மாநில அரசு தெரிவிக்க வேண்டும் என்றனர்.
மனிதத்தன்மையற்ற இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளிவைக்க அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் அரசை வலியுறுத்தி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.