தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்? பா.ஜ.க'விற்கு நீதிமன்றம் கேள்வி!

தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி எப்படி வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்? பா.ஜ.க'விற்கு நீதிமன்றம் கேள்வி!

சென்னை உயர் நீதிமன்றம்

புதுச்சேரியில் பா.ஜ.க சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதுச்சேரியில் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்தது எப்படி என புதுவை பா.ஜ.க' வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுச்சேரியில் பா.ஜ.க சார்பில் தொகுதி வாரியாக வாட்ஸ் ஆப் குரூப்கள் ஆரம்பித்து தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் மற்றும் முகவரி மட்டுமே இடம் பெற்றிருக்கும் என்பதால் ஆதார் ஆணையத்தில் இருந்து வாக்காளர்களின் மொபைல் எண்களைப் பெற்று பாஜக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவது குறித்து சிறப்பு புலன் விசாரணை குழுவை நியமித்து விசாரிக்க உத்தரவிடக்கோரி புதுச்சேரி ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் ஆனந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் அளித்த புகார் குறித்து சைபர் குற்றப் பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், வாக்களர்களுக்கு பல்க் எஸ்.எம்.எஸ். மூலம் பிரச்சாரம் செய்ய பாஜகவினர் தங்களிடம் அனுமதி கோரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது

சைபர் கிரைம் விசாரித்து வருவதாகவும், அதன் அறிக்கையை பொறுத்து தலைமை தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ளாமல் பாஜக மீது நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பாஜகவினர் மீதான புகாரை விசாரித்து முடிக்கும் வரை புதுச்சேரியில் தேர்தலை ஏன் தள்ளிவைக்க கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஆதார் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆதார் விவரங்கள் திருடப்படவில்லை என்றும் ஆதார் தகவல்கள் கசியவில்லை என்றும் பதில் மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்தல் ஆணையத்தின் நோட்டீசுக்கு பா.ஜ. அளித்த விளக்கத்தை நிராகரித்துள்ளதாகவும், இதுகுறித்து காவல்துறை விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதுசம்பந்தமான முழுமையான விசாரணை அறிக்கை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இன்று அல்லது நாளை தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார்.

அதேபோல, ஏஜெண்ட்கள் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பிய வகையில் 4.3 லட்சம் ரூபாய் செலவழித்ததாக, பா.ஜ. கட்சி வேட்பாளர்களின் பெயரில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கட்சியினர் மூலம் சேகரிக்கப்பட்ட மொபைல் எண்களை ஏஜென்சிகளுக்கு அளித்து அதன் மூலம் பிரச்சாரம் செய்து கொண்டதாகத் தெரிவித்தார்.

பா.ஜ. தரப்பு பதில் மனு தங்களுக்கு இன்று காலை தான் கிடைத்ததாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கையை தொடரலாம் என உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தனர்.

Also read... தடைபடுமா திருச்சி தேர்தல்? சிபிஐ விசாரணைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை...!

முன்னதாக, தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமல் வாக்காளர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியது எப்படி என புதுவை பா.ஜ.வுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்குரிமையை மக்கள் நேர்மையாக, நியாயமாக செலுத்த அனுமதிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

பல பிரச்னைகள் இருந்த போதும், நம்பகத்தனமையை ஏற்படுத்த வேண்டும் எனவும், நம்பகத்தன்மை இழந்தால் உலக நாடுகள் மத்தியில் நம் நாட்டின் மதிப்பு வீழ்ந்து விடும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், உலக நாடுகளுக்கு இந்தியா உதாரணமாக திகழ வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: