சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக பெண்களுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கான மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலின, பழங்குடியின மற்றும் அவற்றின் பெண்கள் என 32 வார்டுகள் ஒதுக்கப்படும் நிலையில், மீதமுள்ள 168 இடங்களில் பொதுப்பிரிவில் பெண்களுக்கு 89 இடங்களும் , ஆண்களுக்கு 79 இடங்களும் ஒதுக்கபட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட தமிழ்நாடு நகராட்சி சட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடாக, 84 இடங்கள் தான் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கவேண்டும்.
ஆனால், மண்டல வாரியாக வார்டுகளை பிரித்து பெண்களுக்கு ஒதுக்குவதால், அவர்களுக்கு கூடுதல் வார்டுகள் வருவதாக மாநகராட்சி தெரிவித்திருந்தது .
இந்நிலையில், மண்டல வாரியாக வார்டுகளை ஒதுக்கீடு செய்யாமல், மாநகராட்சியின் ஒட்டுமொத்த வார்டுகளையும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமாக பிரித்து வழங்க வேண்டும் கோரி வழக்கறிஞர் பார்த்திபன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, மொத்த இடங்களில் தான் வழங்க வேண்டுமே தவிர மண்டல வாரியாக வழங்கக்கூடாது என்றும், பெண்களுகு வழங்குவதை எதிர்க்கவில்லை என்றும் வாதிட்டார்.
தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, சென்னையை பொறுத்தவரை மத்திய பகுதியில் தான் பெண்கள் அதிகம் என்றும், புறநகர் பகுதிகளில் குறைவு என்பதால் போதிய பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் விதிகளுக்கு உட்பட்டு மண்டல வாரியாக வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
Also read... ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக் கோரி நளினி தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசியலைமைப்பு சட்டத்தில் மொத்த இடங்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டுமென இருப்பதால், அதை மீறக்கூடாது என தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் மண்டல வாரியான ஒதுக்கீடு செய்யும் அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
Also read... அணைகள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
பெண்களுக்கு வழங்குவதை மனுதாரர் எதிர்க்கவில்லை என்பதால், 50 சதவீத ஒதுக்கீடு அடிப்படையில் தேர்தல் நடத்தலாம் என்றும், ஆனால் அது மொத்த வார்டுகளின் அடிப்படையில் தான் இருக்க வேண்டுமென கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.