கோயம்பேடு காய்கறி அங்காடிகளில் சில்லறை விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளதா? ஆதாரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு..

கோயம்பேடு காய்கறி அங்காடிகளில் சில்லறை விற்பனை அனுமதிக்கப்பட்டுள்ளதா? ஆதாரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு..
இன்று திறக்கப்பட்ட கோயம்பேடு சந்தை
  • News18
  • Last Updated: October 16, 2020, 1:27 PM IST
  • Share this:
கோயம்பேடு காய்கறி அங்காடிகளில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கடந்த மார்ச் மாதம் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதை தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிய கனிகள் மற்றும் பூக்கள் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாத இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் கடந்த மே மாதம் முதல் வாரத்திலும் மூடப்பட்டன.

பின்னர் மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் தற்காலிகமாக செயல்பட தொடங்கின. ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த தமிழக அரசு, உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18-ஆம் தேதியும், காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28-ஆம் தேதியும் திறக்கப்பட்டன.

இந்நிலையில், கனி மொத்த விற்பனை அங்காடியை திறக்க உத்தரவிடக் கோரி சென்னை கோயம்பேடு 4-வது நுழைவு வாயில் கனி மொத்த வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் பொது செயலாளர் செயலாளர் எம்.செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.


மாதவரம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் போதுமான வசதிகள் இல்லை எனவும், 700 பதிவு செய்யப்பட்ட வியாபாரிகள் உள்ள நிலையில், அங்கு 200 வியாபாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் மற்ற வியாபாரிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோயம்பேடு கனிகள் மொத்த அங்காடியை திறக்க கோரி அளித்த மனுவை, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு பின் பரிசீலித்த அரசு, படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என மழுப்பலாக பதில் அளித்துள்ளதாக மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

Also read... தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்குமாறு கோரி எம்.பி., ரவீந்திரநாத் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..ஆயுதபூஜை வருவதால் கனிகள் மொத்த அங்காடியை திறக்க அனுமதிக்க வேண்டும் எனவும், சில்லறை விற்பனைக்கு அனுமதியளித்ததே தொற்று பரவலுக்கு காரணம் என்றும் புகார் தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு அங்காடி பராமரிப்பு பணிகள் நடந்து வருவதாகவும், பணிகள் முடிந்து ஆய்வு மேற்கொண்ட பின் படிப்படியாக அங்காடிகள் திறக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காய்கறி அங்காடியில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது தொடர்பாக புகைப்பட மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
First published: October 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading