தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை என்ன? அரசு 4 வாரத்தில் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர்நீதிமன்றம்.

10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் உள்ள நிலையில் 2 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்டவர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் வழக்கறிஞர் சிராஜுதீன் வாதிட்டார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.பாஸ்கரனை நியமித்து, டிசம்பர் 30ஆம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இவரது நியமனத்தை எதிர்த்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் லோகேஸ்வர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், வெளிப்படையான அறிவிப்பு வெளியிடாமல்,
தகுதியானவர்கள் பெயர்களை பரிசீலிக்காமல், சட்ட அமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.சிராஜுதீன் ஆஜராகி, நீதிபதி பாஸ்கரன் நியமிக்கப்பட்டதை எதிர்க்கவில்லை என்றும், வெளிப்படையான விளம்பரத்தை வெளியிடாமல் ஏற்கனவே ஒருவரை முடிவு செய்த பின் தேர்வுக் குழுவை கூட்டியதாகவும், அதன் கூட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் புறக்கணித்த நிலையிலும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

Also read... மதுரையில் தவறான மருந்தால் பக்கவிளைவு: இளைஞரின் உடல் முழுவதும் கடும் அலர்ஜி!

10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதிகள் பலர் உள்ள நிலையில் 2 ஆண்டுகள் மட்டுமே அனுபவம் கொண்டவர் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் வழக்கறிஞர் சிராஜுதீன் வாதிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகி வாதிட இருப்பதால் வழக்கை ஒத்திவைக்க கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து வழக்கு குறித்து பதில் மனு தாக்கல் செய்யவோ அல்லது நியமனத்தில் பின்பற்றிய நடைமுறை குறித்து விளக்கம் அளிக்கவோ உத்தரவிட்டு வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: